ஐகோர்ட்டு உத்தரவால் மூடல்: பெரம்பலூர்-அரியலூர் மாவட்டங்களில் வெறிச்சோடிய டாஸ்மாக் கடைகள்


ஐகோர்ட்டு உத்தரவால் மூடல்: பெரம்பலூர்-அரியலூர் மாவட்டங்களில் வெறிச்சோடிய டாஸ்மாக் கடைகள்
x
தினத்தந்தி 10 May 2020 11:27 AM IST (Updated: 10 May 2020 11:27 AM IST)
t-max-icont-min-icon

ஐகோர்ட்டு உத்தரவின்படி மூடப்பட்டதால், பெரம்பலூர்-அரியலூர் மாவட்டங்களில் டாஸ்மாக் கடைகள் உள்ள பகுதிகள் வெறிச்சோடி காணப்பட்டன.

பெரம்பலூர், 

ஐகோர்ட்டு உத்தரவின்படி மூடப்பட்டதால், பெரம்பலூர்-அரியலூர் மாவட்டங்களில் டாஸ்மாக் கடைகள் உள்ள பகுதிகள் வெறிச்சோடி காணப்பட்டன.

டாஸ்மாக் கடைகள்

கொரோனா வைரஸ் பரவலை தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது. இதனால் தமிழகத்தில் அனைத்து டாஸ்மாக் கடைகளும் கடந்த மார்ச் மாதம் 24-ந் தேதி முதல் மூடப்பட்டன. இந்நிலையில் 43 நாட்களுக்கு பின்னர் கடந்த 7-ந்தேதி முதல் நிபந்தனைகளுடன் தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளை திறக்க அரசு அறிவித்தது. இதன்படி, கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகமாக உள்ள பகுதிகளை தவிர, மற்ற பகுதிகளில் கடந்த வியாழக்கிழமையன்று டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டன.

இதில் பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள 35 டாஸ்மாக் கடைகளில், 34 கடைகளும், அரியலூர் மாவட்டத்தில் உள்ள 53 டாஸ்மாக் கடைகளில் 26 கடைகளும் திறக்கப்பட்டு, மது பாட்டில்கள் விற்பனை நடந்தது. முதல் நாளன்று பெரம்பலூர்-அரியலூர் மாவட்ட டாஸ்மாக் கடைகளில் மொத்தம் ரூ.2 கோடியே 81 லட்சத்து 15 ஆயிரத்து 340-க்கு மது பாட்டில்கள் விற்பனையானது. 2-வது நாளான நேற்று முன்தினம் ஒரே நாளில் பெரம்பலூர் மாவட்டத்தில் ரூ.95 லட்சத்து 33 ஆயிரத்து 10-க்கும், அரியலூர் மாவட்டத்தில் ரூ.1 கோடியே 29 லட்சத்து 10 ஆயிரத்து 140-க்கும் என மொத்தம் ரூ.2 கோடியே 24 லட்சத்து 43 ஆயிரத்து 150-க்கு மது பாட்டில்கள் விற்பனையானது.

வெறிச்சோடியது

இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை, தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளை மூட சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டது. இதனால் அரியலூர்-பெரம்பலூர் மாவட்டங்களில் டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டன. கடந்த 7, 8-ந்தேதிகளில் திருவிழா போல் டாஸ்மாக் கடைகளில் மது பாட்டில்கள் வாங்க மதுப்பிரியர்களின் கூட்டம் அலை மோதிய நிலையில் நேற்று டாஸ்மாக் கடைகள் திறக்கப்படாததால் அந்த பகுதி வெறிச்சோடி காணப்பட்டது. மேலும் டாஸ்மாக் கடைகளின் முன்பு போலீசார், ஊர்க்காவல் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

Next Story