தனிமைப்படுத்தும் முகாம் அமைக்க எதிர்ப்பு: அரசு பள்ளியை முற்றுகையிட்ட மக்கள்
பள்ளி வளாகத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்களை தங்க வைக்கும் முகாம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து அரசு பள்ளியை மக்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தேனி,
தேனி அருகே கொடுவிலார்பட்டியில் அரசு மேல்நிலைப்பள்ளி அமைந்துள்ளது. சென்னை மற்றும் பிற மாவட்டங்களில் இருந்து தேனி மாவட்டத்துக்கு திரும்பி வருபவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்படுவதால், அவ்வாறு பரிசோதனைக்கு உட்படுத்தப்படும் நபர்கள் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில், இந்த பள்ளி வளாகத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்களை தங்க வைக்கும் முகாம் அமைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படுகிறது. இதற்கு அப்பகுதியை சேர்ந்த மக்கள் எதிர்ப்பு தெரிவித்து, பள்ளி கட்டிடத்தை நேற்று முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்ததும் தேனி போலீஸ் துணை சூப்பிரண்டு முத்துராஜ் தலைமையில் போலீசார் அங்கு விரைந்து சென்றனர். முற்றுகையிட்ட மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
மக்களின் விருப்பத்திற்கு எதிராக எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாது என்று போலீசார் உறுதி அளித்தனர். அதைத் தொடர்ந்து மக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
Related Tags :
Next Story