திண்டுக்கல்லில் பயங்கரம்: பிரபல ரவுடி வெட்டி படுகொலை - 6 பேரை பிடித்து போலீசார் விசாரணை
திண்டுக்கல்லில் பிரபல ரவுடி வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுதொடர்பாக 6 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
குள்ளனம்பட்டி,
திண்டுக்கல் பிள்ளையார்பாளையம் காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் கண்ணன். இவரது மகன் ரமேஷ் என்ற சுள்ளான் (வயது 25). பிரபல ரவுடியான இவர் மீது கொலை, கொலை முயற்சி உள்பட பல்வேறு வழக்குகள் திண்டுக்கல் தாலுகா, தெற்கு போலீஸ் நிலையங்களில் உள்ளன.
இந்தநிலையில் ரமேஷ், திண்டுக்கல் வேடபட்டியில் உள்ள அவரது உறவினர் வீட்டுக்கு அடிக்கடி வந்து செல்வது வழக்கம். நேற்று முன்தினம் இரவு பாரதிபுரம் கருப்புசாமி கோவில் அருகே நடந்து சென்றார். அப்போது ஒரு கும்பல் ரமேசை வழிமறித்து தகராறில் ஈடுபட்டது. பின்னர் ஆத்திரம் அடைந்த அந்த கும்பல் கத்தி, அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களால் ரமேசை சரமாரியாக வெட்டியது.
இதில் ரமேசின் தலை, கழுத்து, நெஞ்சு உள்ளிட்ட பகுதிகளில் சரமாரியாக அரிவாள் வெட்டு விழுந்தது. இதையடுத்து பலத்த காயமடைந்த ரமேஷ், சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக இறந்தார். அவர் இறந்ததை உறுதி செய்த அந்த கும்பல், கொலை வெறியுடன் அங்கிருந்து தப்பி சென்றது.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் தெய்வம் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். பின்னர் ரமேசின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்திவேல், போலீஸ் துணை சூப்பிரண்டுகள் வினோத், மணிமாறன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர்.
பின்னர் கைரேகை நிபுணர்கள் வந்து தடயங்களை சேகரித்தனர். மேலும் சம்பவ இடத்துக்கு மோப்ப நாய் வரவழைக்கப்பட்டது. அது கொலை சம்பவம் நடந்த இடத்தில் இருந்து மோப்பம் பிடித்தபடி சிறிது தூரம் ஓடியது. ஆனால் யாரையும் கவ்வி பிடிக்கவில்லை. இந்த கொலை குறித்து தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
முதற்கட்ட விசாரணையில், ரமேசுக்கும், பாரதிபுரத்தை சேர்ந்த சிலருக்கும், பெண் பிரச்சினை தொடர்பாக முன்பகை இருந்ததாக கூறப்படுகிறது. இதன் காரணமாக ரமேஷ் வெட்டி படுகொலை செய்யப்பட்டு இருக்கலாம் என்று போலீசார் கருதுகின்றனர். அதன்பேரில் ரமேசின் செல்போனுக்கு வந்த அழைப்புகளை வைத்து 6 பேரை பிடித்து தாலுகா போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த கொலை சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
Related Tags :
Next Story