ஐகோர்ட்டு உத்தரவுபடி 110 மதுக்கடைகள் பூட்டி ‘சீல்’ வைப்பு
ஐகோர்ட்டு உத்தரவு எதிரொலியாக மாவட்டம் முழுவதும் 110 மதுக்கடைகள் பூட்டி ‘சீல்’ வைக்கப்பட்டது.
திண்டுக்கல்,
கொரோனா தடுப்புக்காக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால், தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் மதுக்கடைகள் அனைத்தும் மூடப்பட்டன. இதனால் மது கிடைக்காமல் குடிமகன்கள் திணறி வந்தனர். இதையடுத்து சாராயம் காய்ச்சுதல், மதுக்கடைகளில் பூட்டை உடைத்து கொள்ளையடித்தல் உள்ளிட்ட சம்பவங்கள் நடந்தன. இதற்கிடையே 43 நாட்களுக்கு பின்னர் கடந்த 7-ந்தேதி மதுக்கடைகள் திறக்கப்பட்டன.
மேலும் கொரோனா பாதித்த பகுதிகள், நெரிசல் மிகுந்த பகுதிகளை தவிர மற்ற இடங்களில் இருக்கும் கடைகள் திறக்கப்பட்டன. இதற்காக திருமண மண்டபங்கள், குடோன்களில் வைத்திருந்த மதுபாட்டில்கள் மதுக்கடைகளுக்கு கொண்டு வரப்பட்டன. இதற்கிடையே 2 நாட்கள் விற்பனை நடைபெற்ற நிலையில், மதுக்கடைகளை மூடும்படி ஐகோர்ட்டு உத்தரவிட்டது.
இதைத் தொடர்ந்து மாநிலம் முழுவதும் மதுக்கடைகளை பூட்டி ‘சீல்’ வைக்கும் பணி நடந்தது. திண்டுக்கல் மாவட்டத்தை பொறுத்தவரை மொத்தம் 155 மதுக்கடைகள் உள்ளன. அதில் 110 மதுக்கடைகள் மட்டுமே 2 நாட்கள் திறக்கப்பட்டன. அதில் 2-வது நாள் குடையுடன் வந்த குடிமகன்களுக்கு மட்டுமே மது வழங்கப்பட்டது. பலர் 2 முதல் 3 நாட்களுக்கு தேவையான மதுபானத்தை வாங்கி சென்றனர்.
இதற்கிடையே ஐகோர்ட்டு உத்தரவு எதிரொலியாக 110 மதுக்கடைகளும் பூட்டி, வெல்டிங் வைத்து ‘சீல்’ வைக்கப்பட்டது. மேலும் மதுக்கடைகளில் இருக்கும் மதுபானங்கள் அப்புறப்படுத்தப்படவில்லை. இதனால் மதுக்கடைகளை உடைத்து கொள்ளையடிக்கும் சம்பவங்கள் நடைபெற வாய்ப்பு உள்ளது. அதை தடுக்கும் வகையில் மதுக்கடைகள் உள்ள பகுதிகளில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர்.
Related Tags :
Next Story