ராமநாதபுரம் மாவட்டத்தில் 2-வது உயிரிழப்பு: கொரோனாவுக்கு மூதாட்டி பலி
கொரோனா தொற்றுக்கு ஆளான மூதாட்டி சிகிச்சை பலன் அளிக்காமல் பரிதாபமாக இறந்தார். இதனால் ராமநாதபுரம் மாவட்டத்தில் உயிரிழப்பு 2-ஆக உயர்ந்தது.
சிவகங்கை,
கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கொரோனா சிறப்பு வார்டில் அனுமதிக்கப்பட்டனர். இதில் அந்த மாவட்டத்தை சேர்ந்த 14 பேர் குணமடைந்தனர். 8 பேர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.
ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையைச் சேர்ந்த 77 வயது மூதாட்டிக்கு கடந்த 5-ந் தேதி கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் சிவகங்கை மருத்துவகல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு கொரோனா சிறப்பு வார்டில் சிகிச்சை பெற்று வந்த அவர் நேற்று பரிதாபமாக உயிரிழந்தார். இவருக்கு உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு உள்ளிட்ட உடல் பாதிப்புகள் இருந்ததாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.
அவரது உடலை போலீசார் கீழக்கரைக்கு கொண்டு சென்று உறவினர்களிடம் ஒப்படைத்தனர். பின்னர் பாதுகாப்பு விதிகளை பின்பற்றி உடல் அடக்கம் செய்யப்பட்டது.
ராமநாதபுரம் மாவட்டத்தில் ஏற்கனவே கீழக்கரையை சேர்ந்த 70 வயது முதியவர் சென்னையில் நோய்த்தொற்றுக்கு உள்ளாகி கொரோனாவால் உயிரிழந்த நிலையில் தற்போது 2-வது உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது.
Related Tags :
Next Story