பள்ளிப்பட்டு அருகே, தமிழக எல்லையில் உள்ள ஆந்திர மதுபான கடைகளை மூட உத்தரவு - கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாமல் நடவடிக்கை


பள்ளிப்பட்டு அருகே, தமிழக எல்லையில் உள்ள ஆந்திர மதுபான கடைகளை மூட உத்தரவு - கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாமல் நடவடிக்கை
x
தினத்தந்தி 10 May 2020 10:30 PM GMT (Updated: 10 May 2020 9:30 PM GMT)

பள்ளிப்பட்டு அருகே தமிழக எல்லையோரம் உள்ள ஆந்திர மதுபான கடைகளில் தமிழகத்தை சேர்ந்த ‘குடி’மகன்கள் குவிந்ததால், கடைகள் மூடி ‘சீல்’ வைக்கப்பட்டது. தமிழகத்தில் உள்ள டாஸ்மாக் கடைகள் திறக்கப் படும் வரை கடைகளை திறக்கப் போவதில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பள்ளிப்பட்டு, 

திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு ஒன்றியத்தின் எல்லையோரம் 4 திசைகளிலும் ஆந்திர மாநில மதுக்கடைகள் உள்ளன. சென்னை ஐகோர்ட்டு உத்தரவுப்படி, தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் நேற்று முன்தினம் மூடப்பட்டதால் தமிழக எல்லையில் உள்ள ஆந்திர மாநிலத்திற்கு உட்பட்ட கடைகளில் கூட்டம் அலைமோதியது.

பள்ளிப்பட்டு அருகே எல்லையில் உள்ள ஆந்திர மாநிலம் பலிஜி கண்டிகை என்ற கிராமத்தில் 2 மதுக்கடைகள் நேற்று திறக்கப்பட்டன. இந்த கடைகளில் ஆர்.கே.பேட்டை, அத்திமாஞ்சேரிப்பேட்டை, வங்கனூர், அம்மையார்குப்பம் பகுதிகளில் வசிக்கும் தமிழகத்தை சேர்ந்த ‘குடி’மகன் கள் குவிந்தனர்.

ஆந்திர மதுக்கடைகள் மூடல்

இவர்கள் சமூக இடை வெளி இல்லாமல் நெருக்கியடித்தபடி மது வாங்கி சென்றனர். அங்கு கூட்டம் அலைமோதியதை அடுத்து, பாதுகாப்புக்கு நின்ற ஆந்திர மாநில போலீசாரால் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியவில்லை. இதுகுறித்து அவர்கள் சித்தூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுக்கு தகவல் கொடுத்தனர்.

இதைத்தொடர்ந்து அவர், தமிழக எல்லையோரம் உள்ள ஆந்திர மதுபான கடைகளை உடனடியாக மூடி ‘சீல்’ வைக்க உத்தரவிட்டார். மேலும், தமிழக அரசு டாஸ்மாக் கடைகள் திறக்கும்வரை, தமிழக எல்லையில் அமைந்துள்ள ஆந்திர மாநில மதுக்கடைகளை திறக்க தடை விதித்து அவர் உத்தரவிட்டதாக போலீசார் தெரிவித்தனர்.


Next Story