நெய்வேலி அருகே பெண் பிணமாக கிடந்த வழக்கில் திருப்பம்: உருட்டு கட்டையால் அடித்து கொலை செய்த கொத்தனார் கைது


நெய்வேலி அருகே பெண் பிணமாக கிடந்த வழக்கில் திருப்பம்: உருட்டு கட்டையால் அடித்து கொலை செய்த கொத்தனார் கைது
x
தினத்தந்தி 11 May 2020 3:35 AM IST (Updated: 11 May 2020 3:35 AM IST)
t-max-icont-min-icon

நெய்வேலி அருகே பெண் பிணமாக கிடந்த வழக்கில் திருப்பம் ஏற்பட்டுள்ளது. அவர் ஆசைக்கு இணங்க மறுத்ததால் உருட்டு கட்டையால் அடித்து கொலை செய்த கொத்தனாரை போலீசார் கைது செய்தனர்.

நெய்வேலி,

புவனகிரி அருகே உள்ள வடகிருஷ்ணாபுரம் புதுத்தெருவை சேர்ந்தவர் சந்திரன்(வயது 65). இவரது மகள் செல்வி (35). செல்விக்கு திருமணமாகி அவரது கணவர் கோவிந்தன் இறந்து விட்டார். இந்த நிலையில் அவர் சித்தாள் வேலைக்கு சென்று வந்தார். கடந்த 8-ந்தேதி வேலைக்கு சென்ற அவர் வீடு திரும்பவில்லை. தனது மகளை பல இடங்களில் தேடிப்பார்த்த சந்திரன் கடைசியில் தனது மகளுடன் வேலை பார்க்கும் கொத்தனாரான நெய்வேலி இந்திரா நகர் மாற்று குடியிருப்பை சேர்ந்த சக்திவேல் (40) வீட்டிற்கு சென்று தேடினார். அப்போது அவரது வீட்டுக்கு அருகே உள்ள மரத்தடியில் செல்வி பிணமாக கிடந்தார். இதை பார்த்து சந்திரன் அதிர்ச்சியடைந்தார். மேலும் அவரது தலையில் ரத்த காயங்கள் இருந்தன. இதனால் தனது மகள் சாவில் சந்தேகம் இருப்பதாக கூறி, நெய்வேலி டவுன்ஷிப் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர்.

கொத்தனார் கைது

இதற்கிடையே சக்திவேலை பிடித்து விசாரித்தால், உண்மை தெரியவரும் என்ற நோக்கில் போலீசார் அவரை தேடினர். ஆனால் அவர் கிடைக்கவில்லை. இந்த நிலையில் நேற்று காலை, வடக்கு மேலூர் கிராம நிர்வாக அலுவலர் சக்திகுமாரிடம் சக்திவேல் சரணடைந்தார். பின்னர் அவரை நெய்வேலி டவுன்ஷீப் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆறுமுகத்திடம் கிராம நிர்வாக அலுவார் சக்திகுமார் ஒப்படைத்தார். தொடர்ந்து சக்திவேலை கைது செய்தனர். கொலை குறித்து சக்திவேல் போலீசில் அளித்த வாக்கு மூலத்தில் கூறியிப்பதாவது:-

ஒன்றாக மது குடித்தோம்

3 ஆண்டுகளாக செல்வி என்னுடன் சேர்ந்து கட்டிட வேலை பார்த்து வந்தார். இதன் மூலம் அவர் எனக்கு பழக்கம். இந்த நிலையில் 8-ந்தேதி எனது மனைவி, 3 குழந்தைகள் உறவினர் வீட்டுக்கு சென்றுவிட்டனர். வீட்டில் யாரும் இல்லை. இதையடுத்து செல்வியை எனது வீட்டுக்கு அழைத்து சென்றேன். அங்கு இருவரும் சேர்ந்து மது குடித்தோம். பின்னர் எனது ஆசைக்கு இணங்குமாறு செல்வியிடம் கேட்ட போது அவர் மறுத்துவிட்டார். தொடர்ந்து போதை அதிகமானதால் இருவரும் தூங்கிவிட்டோம். மாலையில் தூங்கி எழுந்த பின்னர் மீண்டும் ஆசைக்கு இணங்க அழைத்த போது அவர் மறுத்துவிட்டார். இதில் ஆத்திரமடைந்த நான், அவரது தலையை பிடித்து சுவரில் அடித்து, உருட்டு கட்டையால் தாக்கினேன். இதில் அவர் சத்தமிட்டார். இதையடுத்து நான் வைத்திருந்த மதுவை எடுத்து செல்வியின் வாயில் ஊற்றிவிட்டு, வீட்டுக்கு வெளியே போட்டு சென்றுவிட்டேன். இதன் பின்னர் தான் அவர் உயிரிழந்து இருப்பது தெரியவந்தது என்று தெரிவித்துள்ளார். பெண்ணை அடித்து கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Next Story