உப்பு தேக்கத்தை போக்குவதற்கு வசதியாக அண்டர்காட்டில் லாரிகள் நிறுத்துவதற்கு இடம் தேர்வு
வேதாரண்யத்தில் உப்பு தேக்கத்தை போக்குவதற்கு வசதியாக அண்டர்காட்டில் லாரிகளை நிறுத்துவதற்கு இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
வேதாரண்யம்,
வேதாரண்யத்தில் உப்பு தேக்கத்தை போக்குவதற்கு வசதியாக அண்டர்காட்டில் லாரிகளை நிறுத்துவதற்கு இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து விரைவில் உப்பு ஏற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என லாரி உரிமையாளர்கள் தெரிவித்தனர்.
உப்பு மூட்டைகள் தேக்கம்
வேதாரண்யம் தாலுகாவில் அகஸ்தியன்பள்ளி, கோடியக்காடு, கடினல்வயல் ஆகிய பகுதிகளில் 9 ஆயிரம் ஏக்கரில் உப்பு உற்பத்தி நடைபெறுகிறது. ஆண்டு ஒன்றுக்கு 6 லட்சம் டன் உப்பு உற்பத்தி நடைபெற்று, அந்த உப்பு ஆந்திரா, கேரளா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களுக்கு லாரிகள் மூலம் அனுப்பி வைக்கப்படுகிறது. இந்தநிலையில் அகல ரெயில்பாதை திட்டத்திற்காக கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு ரெயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. இதனால் வேகன் மூலம் சென்ற உப்பு தற்போது லாரிகளில் மட்டுமே அனுப்பப்படுகிறது. நாள் ஒன்றுக்கு 100 லாரிகளுக்கு மேல் உப்பு ஏற்றி இங்கிருந்து செல்லும். தற்போது தமிழகத்தில் கொரோனா பரவலை தடுப்பதற்காக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் கடந்த மாதம் வேதாரண்யத்தில் 75 ஆயிரம் டன் உப்பு மூட்டைகள் தேக்கம் ஏற்பட்டது. அங்கு லாரிகளை நிறுத்துவதற்கும், டிரைவர்கள் தங்குவதற்கும் பல்வேறு பிரச்சினைகள் ஏற்பட்டன.
உப்பு ஏற்றி செல்ல அனுமதி
இதனால் நாகை மாவட்ட நிர்வாகம் முதற்கட்டமாக 40 லாரிகளில் உப்பு ஏற்றி செல்ல அனுமதி அளித்தது. ஆனால் பொதுமக்கள் எதிர்ப்பு காரணமாக 10 லாரிகளில் மட்டுமே உப்பு ஏற்றி செல்ல அனுமதி அளிக்கப்பட்டது. 10 லாரிகள் போதுமானதாக இல்லை என்றும், வெளியூர் லாரி டிரைவர்களுக்கு உணவு, தங்குமிடம் பிரச்சினைகள் ஏற்படுவதாலும் லாரி உரிமையாளர்கள் உப்பு ஏற்றுவதற்கு லாரி அனுப்புவதை கடந்த 5 நாட்களாக நிறுத்திவிட்டனர். இதனால் உப்பு ஏற்றுமதி பாதிக்கப்பட்டது. உப்பு ஏற்றுமதி நிறுத்தப்பட்ட நிலையிலும் உப்பு உற்பத்தி தொடர்ந்து நடைபெற்று கொண்டிருக்கிறது. இதனால் உப்பள பகுதியில் மலைபோல் உப்பு குவிந்து காணப்படுகிறது. இந்தநிலையில் நேற்று லாரிகளை நிறுத்துவதற்காகவும், உப்பு தேக் கத்தை போக்குவதற்கு வசதியாகவும் வேதாரண்யம் லாரி உரிமையாளர்கள், லாரி புரோக்கர் அசோசியேஷனை சேர்ந்தவர்கள் அண்டர்காடு பகுதியில் திருத்துறைப்பூண்டி-வேதாரண்யம் பிரதான சாலை ஓரத்தில் 6 ஏக்கர் பரப்பளவில் தனியாருக்கு சொந்தமான இடத்தை தேர்வு செய்துள்ளனர்.
விரைவில் உப்பு ஏற்ற நடவடிக்கை
நாளை(செவ்வாய்க்கிழமை) முதல் தேர்வு செய்யப்பட்ட இடத்தில் லாரிகள் நிறுத்தப்படும். மேலும் லாரி டிரைவர்கள் தங்குவதற்கு என்று தனி இடம் ஒதுக்கப்படும். அவர்களுக்கு அடிப்படை வசதிகள் அனைத்தும் அங்கேயே செய்து கொடுக்கப்படும். வேதாரண்யத்தில் உப்பு விரைவில் ஏற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என லாரி உரிமையாளர்கள் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story