விரிகோடு பகுதியில் வீடு வீடாக கபசுர குடிநீர் வினியோகம் பொதுமக்களிடம், பொன்.ராதாகிருஷ்ணன் குறைகளை கேட்டறிந்தார்


விரிகோடு பகுதியில் வீடு வீடாக கபசுர குடிநீர் வினியோகம் பொதுமக்களிடம், பொன்.ராதாகிருஷ்ணன் குறைகளை கேட்டறிந்தார்
x
தினத்தந்தி 11 May 2020 6:23 AM IST (Updated: 11 May 2020 6:23 AM IST)
t-max-icont-min-icon

கொரோனாவால் தடை செய்யப்பட்டுள்ள விரிகோடு பகுதியில் வீடு வீடாக கபசுர குடிநீர் வினியோகம் செய்யப்பட்டது. பொதுமக்களிடம் பொன்.ராதாகிரஷ்ணன் குறைகளை கேட்டறிந்தார்.

குழித்துறை, 

கொரோனாவால் தடை செய்யப்பட்டுள்ள விரிகோடு பகுதியில் வீடு வீடாக கபசுர குடிநீர் வினியோகம் செய்யப்பட்டது. பொதுமக்களிடம் பொன்.ராதாகிரஷ்ணன் குறைகளை கேட்டறிந்தார்.

தடை செய்யப்பட்ட பகுதி

மார்த்தாண்டம் அருகே விரிகோடு பகுதியை சேர்ந்த வியாபாரி ஒருவர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். இதையொட்டி விரிகோடு பகுதியை தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவித்து சீல் வைக்கப்பட்டுள்ளது. வெளி ஆட்கள் யாரும் உள்ளே செல்லாதபடியும், உள்ளிருந்து பொதுமக்கள் வெளியே செல்லாதபடியும் சாலைகள் மூடப்பட்டுள்ளன.

இதனால், பொதுமக்கள் வீடுகளில் முடங்கியுள்ளனர். உண்ணாமலைக்கடை பேரூராட்சி சார்பில் தினமும் காலை 6 மணி முதல் 7 மணி வரை பால் போன்ற பொருட்களும், காலை 9 மணி முதல் 10 மணி வரை காய்கறி பொருட்களும் வீடு, வீடாக வினியோகம் செய்யப்படுகிறது. மேலும், தன்னார்வலர்கள் மூலம் வீடு, வீடாக கபசுர குடிநீர் வினியோகம் செய்யப்பட்டது.

பொன்.ராதாகிருஷ்ணன் பார்வையிட்டார்

நேற்று காலையில் முன்னாள் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் தடை செய்யப்பட்ட விரிகோடு பகுதியை பார்வையிட சென்றார். அவர் விரிகோடு சந்திப்பில் மூடப்பட்ட சாலையின் வெளியே நின்று பொதுமக்கள் சிலரிடம் நேரிலும், போனிலும் குறைகளை கேட்டறிந்தார். பொதுமக்கள் முன்னாள் மந்திரி பொன். ராதாகிருஷ்ணனிடம், வங்கிகளில் இருந்து பணம் எடுக்க வசதி செய்து தர வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.

இதுதொடர்பாக பொன்.ராதாகிருஷ்ணன், உண்ணாமலைக்கடை பேரூராட்சி செயல் அலுவலர் பிரதாபன், சுகாதார அதிகாரி மேஷாக் ஆகியோரிடம் நேரில் ஆலோசனை நடத்தினார். மேலும், மாவட்ட கலெக்டர் பிரசாந்த் வடநேரேவுடன் செல்போனில் தொடர்பு கொண்டு விரிகோடு பகுதி மக்களுக்கு வங்கியில் இருந்து பணம் எடுக்க வசதியாக நடமாடும் ஏ.டி. எம். வசதி செய்து கொடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். அதனை ஏற்றுக்கொண்ட கலெக்டர் உடனடியாக ஏ.டி.எம். வசதி செய்து கொடுப்பதாக உறுதி அளித்ததாக பொன். ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

மீன்விற்க தடை

விரிகோடு மற்றும் மாமூட்டுக்கடை பகுதிகளில் சாலையோரம் சிலர் மீன் மற்றும் காய்கறி பொருட்களை விற்பனை செய்து வந்தனர். தற்போது கொரோனா காரணமாக தடை செய்யப்பட்டுள்ளதால் அந்த பகுதிகளில் மீன் மற்றும் காய்கறி பொருட்கள் விற்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

Next Story