ஊரடங்குக்கு மத்தியிலும் கேரட்டுகளை அறுவடை செய்யும் பணி மும்முரம்


ஊரடங்குக்கு மத்தியிலும் கேரட்டுகளை அறுவடை செய்யும் பணி மும்முரம்
x
தினத்தந்தி 11 May 2020 7:17 AM IST (Updated: 11 May 2020 7:17 AM IST)
t-max-icont-min-icon

ஊரடங்குக்கு மத்தியிலும் ஊட்டியில் கேரட்டுகளை அறுவடை செய்யும் பணி மும்முரமாக நடைபெறுகிறது.

ஊட்டி,

நீலகிரி மாவட்டத்தில் தேயிலை விவசாயத்துக்கு அடுத்தபடியாக காய்கறி சாகுபடி பிரதானமாக உள்ளது. கேரட், பீட்ரூட், முட்டைக்கோஸ், முள்ளங்கி, பீன்ஸ், உருளைக்கிழங்கு போன்ற காய்கறிகள் 7,733 ஹெக்டர் பரப்பளவில் பயிரிடப்பட்டு வருகிறது. ஊரடங்கு உத்தரவு அமலில் இருப்பதால், கிராமப்புறங்களுக்கு பஸ் போக்குவரத்து வசதி இல்லை. அதிக வாடகை கொடுத்து சரக்கு வாகனங்களில் காய்கறிகளை ஏற்றி நகருக்கு கொண்டு வர முடியாத நிலை ஏற்பட்டது.

விவசாயிகளிடம் இருந்து கேரட் ஒரு கிலோ ரூ.10 முதல் ரூ.15 வரை மொத்த வியாபாரிகள் வாங்கி, வெளிமாவட்டங்கள், வெளிமாநிலங்களுக்கு விற்பனைக்காக கொண்டு செல்கின்றனர். சென்னையில் ஒரு கிலோ கேரட் ரூ.100-க்கு மேல் விற்பனை செய்யப்படுகிறது. போதிய விலை கிடைக்காததால் கேரட்டுகளை அறுவடை செய்யாமல் சிலர் நிலத்திலேயே விட்டனர். மேலும் சிலர் அறுவடை செய்து குறைந்த விலைக்கு விற்பனை செய்த பின்னர், நிலத்தை உழுது பூண்டு சாகுபடியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் ஊட்டி மற்றும் அதன்சுற்றுவட்டார பகுதிகளில் ஊரடங்குக்கு மத்தியிலும் கேரட்டுகளை அறுவடை செய்யும் பணி மும்முரமாக நடந்து வருகிறது. ஊட்டி பெர்ன்ஹில் பகுதியில் 4 ஏக்கர் நிலத்தில் பயிரிடப்பட்டு இருந்த கேரட்டுகளை அறுவடை செய்யும் பணி நேற்று நடந்தது. ஒரே நேரத்தில் அதிக தொழிலாளர்களை பணியில் ஈடுபடுத்தினால், கூலி கொடுக்க முடியாது என்பதால் குறைந்த தொழிலாளர்களை கொண்டு பணி நடைபெறுகிறது. அவர்கள் முகக்கவசம் அணிந்து சமூக இடைவெளி விட்டு பணிபுரிந்து வருகின்றனர்.

அந்த இடத்துக்கே வந்து மொத்த வியாபாரிகள் வாங்கி லாரியில் கர்நாடகா மாநிலம் பெங்களூருவுக்கு விற்பனைக்காக கொண்டு சென்றனர். முன்னதாக அறுவடை செய்யப்பட்ட காய்கறிகள் சுத்திகரிக்கப்பட்டு, மூட்டைகளில் நிரப்பப்பட்டது. காய்கறி பயிர்களை நடவு செய்து உரம் இடுவது, களை எடுப்பது, மருந்து தெளிப்பது என 3 மாதங்கள் பராமரிப்பு செலவு, தொழிலாளர்களுக்கு கூலியை கொடுக்க முடியாமல் விவசாயிகள் கடன் வாங்க வேண்டிய நிலை ஏற்பட்டு உள்ளது.

இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது:-

ஊட்டி கேரட் என்றாலே வெளி மார்க்கெட்டுகளில் தனி மவுசு உள்ளது. ஊரடங்கு காலத்தில் எங்களிடம் குறைந்த விலைக்கு வாங்கி மொத்த வியாபாரிகள் அதிக விலைக்கு விற்பனை செய்கின்றனர். கேரட்டுக்கு போதிய விலை கிடைக்காததால் தொழிலாளர்களுக்கு கூலித்தொகையை குறைத்து வழங்கி வருகிறோம். விளைந்த கேரட்டுகளை அறுவடை செய்தால்தான் அடுத்து பயிரிட நிலத்தை தயார்படுத்த முடியும். இருப்பினும், விலை வீழ்ச்சியால் விவசாயிகள் பாதிக்கப்பட்டு உள்ளனர். எனவே அரசு உதவ முன்வர வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.


Next Story