வெளியூர்களில் இருந்து நீலகிரிக்கு, ரேஷன் பொருட்கள் ஏற்றி வரும் லாரிகளுக்கு கிருமி நாசினி தெளிப்பு - டிரைவர்களுக்கு மருத்துவ பரிசோதனை


வெளியூர்களில் இருந்து நீலகிரிக்கு, ரேஷன் பொருட்கள் ஏற்றி வரும் லாரிகளுக்கு கிருமி நாசினி தெளிப்பு - டிரைவர்களுக்கு மருத்துவ பரிசோதனை
x
தினத்தந்தி 11 May 2020 4:30 AM IST (Updated: 11 May 2020 7:17 AM IST)
t-max-icont-min-icon

வெளியூர்களில் இருந்து நீலகிரிக்கு ரேஷன் பொருட்கள் ஏற்றி வரும் லாரிகளுக்கு கிருமி நாசினி தெளிக்கப்படுகிறது. மேலும் டிரைவர்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்படுகிறது.

ஊட்டி,

நீலகிரி மாவட்டத்தில் 2 லட்சத்து 14 ஆயிரத்து 71 ரேஷன் கார்டுதாரர்கள் உள்ளனர். அவர்களுக்கு கடந்த 4-ந் தேதி முதல் மே மாதத்திற்கான அத்தியாவசிய பொருட்கள் விலையின்றி வழங்கப்பட்டு வருகிறது. 402 ரேஷன் கடைகள் மூலம் ஏற்கனவே டோக்கன் வழங்கப்பட்டு, தினமும் 100 பேருக்கு பொருட்கள் வினியோகிக்கப்பட்டு வருகின்றன. தடையின்றி வழங்க கூடுதலாக அத்தியாவசிய பொருட்கள் குடோன்களுக்கு வரவழைக்கப்பட்டு உள்ளது.

ஊட்டி, குன்னூர், கோத்தகிரி, குந்தா, பந்தலூர், கூடலூர் ஆகிய 6 தாலுகாக்களில் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக மொத்த விற்பனை கிடங்குகளில்(குடோன்) இருப்பு வைக்கப்பட்டு இருக்கிறது. இதன் மண்டல அலுவலகம் மற்றும் குடோன் ஊட்டி கூட்ஷெட் சாலையில் உள்ளது. சென்னையில் இருந்து பருப்பு, சமையல் எண்ணெய், சர்க்கரை, கோவையில் இருந்து அரிசி போன்ற அத்தியாவசிய பொருட்கள் தினமும் 15 டன் லாரிகளில் குடோன்களுக்கு கொண்டு வரப்படுகிறது.

தமிழகத்தின் தலைநகரான சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதற்கிடையே கோயம்பேடு மார்க்கெட் சென்று வந்தவர்களில் சிலருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதனால் கொரோனா பரவலை தடுக்கவும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகவும் வெளியூர்களில் இருந்து நீலகிரிக்கு அத்தியாவசிய பொருட்களை ஏற்றி வரும் லாரிகள் சோதனைச்சாவடிகளில் நிறுத்தப்பட்டு சோதனை செய்யப்படுகிறது.

அங்கு சுகாதாரத்துறையினர் லாரி டிரைவர், கிளனர்களுக்கு காய்ச்சல் உள்ளதா என்று தெர்மல் ஸ்கேனர் மூலம் பரிசோதனை மேற்கொள்கின்றனர். குறிப்பிட்ட வெப்பநிலைக்கு கீழ் இருந்தால் மட்டுமே உள்ளே அனுமதிக்கப்படுகின்றனர். ஊட்டியில் நுகர்பொருள் வாணிப கழக குடோன்களுக்கு ரேஷன் பொருட்களை ஏற்றி வரும் லாரிகளுக்கு தினமும் நகராட்சி மூலம் கிருமி நாசினி தெளிக்கப்படுகிறது. லாரிகள் முழுவதும் கிருமி நாசினி தெளித்த பின்னரே ரேஷன் பொருட்களை தொழிலாளர்கள் இறக்கி குடோன்களில் அடுக்கி வைக்கின்றனர்.

லாரி டிரைவர்கள், கிளனர்கள் வெளியிடங்களுக்கு அடிக்கடி சென்று வருவதால், அவர்கள் முறையாக மருத்துவ பரிசோதனை மேற்கொண்டு சமூக இடைவெளியை கடைபிடித்து கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என்று அறிவுரை வழங்கப்பட்டு உள்ளது. சமீபத்தில் மேற்கண்ட குடோனுக்கு வந்த 2 டிரைவர்கள் வெளியூர்களில் இருந்து வந்ததால், கொரோனா அச்சத்தால் சளி மாதிரி பரிசோதனை எடுக்கப்பட்டது. முடிவில் இருவருக்கும் பாதிப்பு இல்லை என்ற பின்னர் அரசு ஊழியர்கள் நிம்மதி அடைந்தனர்.

Next Story