கோவையில் இருந்து விமானம் மூலம் 16 டன் காய்கறி, பூக்கள் சார்ஜாவுக்கு ஏற்றுமதி
கோவையில் இருந்து விமானம் மூலம் 16 டன் காய்கறி, பூக்கள் சார்ஜாவுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டது.
கோவை,
கொரோனா பரவல் காரணமாக இந்தியா முழுவதும் விமான போக்குவரத்து ரத்து செய்யப்பட்ட நிலையில் கோவையிலிருந்து விமானம் மூலம் இந்தியாவின் மற்ற நகரங்களுக்கு மருந்து பொருட்கள் அனுப்பப்பட்டு வந்தன. இந்த நிலையில் கடந்த 2-ந் தேதி கோவையில் இருந்து விமானம் மூலம் சார்ஜாவுக்கு காய்கறி, பழங்கள் மற்றும் பூக்கள் ஏற்றுமதி செய்யப்பட்டன. ஊரடங்கிற்கு பிறகு கோவையில் இருந்து அப்போது தான் முதன்முதலாக வெளிநாட்டுக்கு காய்கறிகள் ஏற்றுமதி செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் மீண்டும் ஏற்றுமதி தொடங்கி உள்ளது. இதற்காக கோவை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த காய்கறி, பழ உற்பத்தியாளர்கள் விளைவித்த கோவைக்காய், வெண்டை உள்பட பல்வேறு காய்கறிகள், பழங்கள் கோவை விமான நிலையத்துக்கு கொண்டு வரப்பட்டன. கோவை பூமார்க்கெட்டில் இருந்து மல்லிகைப்பூ உள்பட பல்வேறு பூக்களும், கேரள மாநிலத்திலிருந்து நேந்திரன் காய்கள் பேக்கிங் செய்யப்பட்டு லாரி மூலம் கோவை கொண்டு வரப்பட்டன. அதன்பின்னர் மொத்தம் 16 டன் காய்கறி, பூக்கள் மற்றும் பழங்கள் நேற்று இரவு 11 மணியளவில் ஸ்பைஸ் ஜெட் விமானம் மூலம் சார்ஜாவுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டன.இதுகுறித்து கோவை விமான நிலைய அதிகாரி ஒருவர் கூறியதாவது:-
ஊரடங்கு காலத்தில் கோவையிலிருந்து சார்ஜாவுக்கு நேற்று 2-வது முறையாக விமானம் மூலம் காய்கறிகள், பழங்கள் ஏற்றுமதி செய்யப்பட்டன. அந்த விமானம் பயணிகள் விமானம் என்றாலும் அதில் சரக்கு வைக்கப்படும் பகுதி, மற்றும் இருக்கைகளில் அவை வைத்து அனுப்பப்பட்டன. இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story