கிராம எல்லையில் வைக்கப்பட்ட தடுப்புகளை அகற்றிய அதிகாரிகளை கண்டித்து மக்கள் போராட்டம் - குன்னூர் அருகே பரபரப்பு


கிராம எல்லையில் வைக்கப்பட்ட தடுப்புகளை அகற்றிய அதிகாரிகளை கண்டித்து மக்கள் போராட்டம் - குன்னூர் அருகே பரபரப்பு
x
தினத்தந்தி 11 May 2020 4:00 AM IST (Updated: 11 May 2020 7:17 AM IST)
t-max-icont-min-icon

குன்னூர் அருகே கிராம எல்லையில் வைக்கப்பட்ட தடுப்புகளை அகற்றிய அதிகாரிகளை கண்டித்து மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

குன்னூர்,

சென்னை கோயம்பேடு மார்க்கெட்டுக்கு சென்று நீலகிரி திரும்பிய லாரி டிரைவர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. இதற்கிடையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு குன்னூர் அருகே உள்ள கோபாலபுரத்தை சேர்ந்த லாரி டிரைவர் ஒருவர், வெளியூர்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் கொண்டு சென்று திரும்பினார்.

இதையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மக்கள் ஒன்றிணைந்து அந்த கிராம எல்லையில் தடுப்புகளை அமைத்தனர். இதன் மூலம் வெளியூர்களில் இருந்து ஆட்கள் உள்ளே வர தடை விதித்து, தங்களை தாங்களே தனிமைப்படுத்தி கொண்டனர். இந்த நிலையில் நேற்று அருவங்காடு பேரூராட்சி அதிகாரிகள் கோபாலபுரத்துக்கு வந்து, கிராம எல்லையில் வைக்கப்பட்ட தடுப்புகளை திடீரென அகற்றினர்.

இதை கண்டித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் கூட்டமாக நின்று போராட்டம் நடத்தினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து கிராம மக்கள் கூறும்போது, கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்கும் வகையில் எங்களை நாங்களே முன்வந்து எல்லையில் தடுப்புகளை வைத்து தனிமைப்படுத்தி இருந்தோம். மற்ற இடங்களில் இருந்து காய்கறி கொண்டு வரும் வாகனங்கள் கோபாலபுரத்துக்குள் வராமல் இருந்தது. ஆனால் வியாபாரிகளுக்கு உதவும் நோக்கில் அதிகாரிகள் தடுப்புகளை அகற்றி உள்ளனர். இதுகுறித்து மாவட்ட கலெக்டரிடம் மனு அளிக்க உள்ளோம் என்றனர்.

Next Story