கோவை தடாகம் பகுதியில், 45 நாட்களுக்கு பிறகு செங்கல் உற்பத்தி தொடங்கியது - தொழிலாளர்கள் மகிழ்ச்சி


கோவை தடாகம் பகுதியில், 45 நாட்களுக்கு பிறகு செங்கல் உற்பத்தி தொடங்கியது - தொழிலாளர்கள் மகிழ்ச்சி
x
தினத்தந்தி 11 May 2020 3:30 AM IST (Updated: 11 May 2020 7:17 AM IST)
t-max-icont-min-icon

45 நாட்களுக்கு பிறகு தடாகம் பகுதியில் செங்கல் உற்பத்தி தொடங்கி உள்ளதால் தொழிலாளர்கள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.

துடியலூர்,

கோவை அருகே உள்ள தடாகம், கணுவாய், சோமையம்பாளையம், பன்னிமடை, நஞ்சுண்டாபுரம், மாங்கரை, ஆனைக்கட்டி, 24 வீரபாண்டி மற்றும் அதைச்சுற்றி உள்ள பகுதிகளில் 100-க்கும் மேற்பட்ட செங்கல் சூளைகள் உள்ளன. இங்கு வடமாநிலங்களை சேர்ந்தவர்கள் மற்றும் தேனி, கம்பம், கடலூர் மற்றும் பல்வேறு பகுதிகளை சேர்ந்த 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை செய்து வருகிறார்கள்.

கொரோனா வைரஸ் காரணமாக ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு உள்ளதால், இங்கு உள்ள செங்கல் சூளைகளில் கடந்த மார்ச் மாதம் 24-ந் தேதிக்கு பிறகு செங்கல் உற்பத்தி செய்யப்படவில்லை. இதனால் அங்கு வேலை செய்து வரும் தொழிலாளர்கள் வருமானம் இல்லாமல் தவித்து வந்தனர்.

இந்த நிலையில் கடந்த 45 நாளுக்கு பின்னர் நேற்று முன்தினம் இங்குள்ள செங்கல் சூளைகளில் செங்கல் உற்பத்தி தொடங்கி உள்ளது. இதனால் தொழிலாளர்கள் அங்கு உற்சாகத்துடன் வேலை செய்து வருகிறார்கள். அத்துடன் பிற பகுதிகளுக்கும் செங்கல் அனுப்பும் பணியும் தொடங்கி உள்ளது.

இது குறித்து செங்கல் சூளைகள் நடத்தி வரும் சிலர் கூறியதாவது:-

கோவை மாவட்டத்தில் செங்கல் என்றாலே அது தடாகம் மற்றும் அதைச்சுற்றி உள்ள பகுதிகளில் இருக்கும் சூளைகளில் உற்பத்தி செய்யப்படும் செங்கல்களுக்குதான் கிராக்கி அதிகம். கோவை, திருப்பூர், நீலகிரி, ஈரோடு உள்பட பல்வேறு பகுதிகளுக்கு இங்கிருந்துதான் செங்கல் அனுப்பி வைக்கப்படுகிறது.

இந்த பகுதியில் தினமும் சராசரியாக 50 லட்சத்துக்கும் மேற்பட்ட செங்கல்கள் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. ஆனால் கொரோனா வைரஸ் இந்த தொழிலையே புரட்டிப்போட்டு விட்டது. கடந்த 45 நாட்களாக எந்த வேலையும் செய்யவில்லை. தற்போது கட்டுமான பணி தொடங்கி இருப்பதால், பலர் செங்கல் ஆர்டர்கள் கேட்டு உள்ளனர்.

இங்கு 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் வேலை செய்து வந்தாலும், கொரோனா அச்சம் காரணமாக பலர் வேலைக்கு வரவில்லை. 3 ஆயிரம் பேர் மட்டுமே வேலைக்கு வந்து உள்ளனர். அவர்களை வைத்து செங்கல் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. தற்போது தினமும் 5 லட்சம் செங்கல்கள் மட்டுமே உற்பத்தி செய்யப்படுகிறது.

தொழிலாளர்கள் அனைவரும் வேலைக்கு வந்தால்தான் முழு உற்பத்தியையும் செய்ய முடியும். எனவே அனைவரும் விரைவில் வேலைக்கு வருவார்கள் என்று நம்புகிறோம். தற்போது இங்கு செங்கல் உற்பத்தி தொடங்கி உள்ளதால் தொழிலாளர்கள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.

மேலும் மாவட்ட எல்லையில் உள்ள சோதனை சாவடிகளில் செங்கல் ஏற்றி செல்லும் வாகனங்களை போலீசார் தடுத்து நிறுத்துகிறார்கள். எனவே கட்டுமான தொழிலுக்கு முக்கிய ஆதாரமாக உள்ள செங்கலை ஏற்றிச்செல்லும் லாரிகளை போலீசார் தடுத்து நிறுத்தக்கூடாது.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

Next Story