குமரி மாவட்டத்தில் தொடர் மழை: கன்னிப்பூ சாகுபடியில் விவசாயிகள் மும்முரம்


குமரி மாவட்டத்தில் தொடர் மழை: கன்னிப்பூ சாகுபடியில் விவசாயிகள் மும்முரம்
x
தினத்தந்தி 11 May 2020 7:19 AM IST (Updated: 11 May 2020 7:19 AM IST)
t-max-icont-min-icon

குமரி மாவட்டத்தில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் கன்னிப்பூ சாகுபடி முன்னேற்பாடு பணிகளில் விவசாயிகள் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.

நாகர்கோவில், 

குமரி மாவட்டத்தில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் கன்னிப்பூ சாகுபடி முன்னேற்பாடு பணிகளில் விவசாயிகள் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.

இதமான சூழ்நிலை

குமரி மாவட்டத்தில் கோடை வெயில் வாட்டி வதைத்து வந்தது. இந்த நிலையில் கடந்த சில நாட்களாக மாவட்டம் முழுவதும் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.

இதனால் நாகர்கோவில் உள்ளிட்ட மாவட்டத்தின் பிற பகுதிகளில் காலையில் இருந்து மதியம் வரை வெயில் இருந்தாலும், மாலையில் மழை அல்லது ஜில்லென்ற சீதோஷ்ண நிலையாக காட்சி அளிக்கிறது. இந்த இதமான சூழலை பொதுமக்கள் மகிழ்ச்சியுடன் அனுபவித்து வருகிறார்கள்.

மழை அளவு

நேற்று முன்தினம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்தது. நேற்று மாலையிலும் நாகர்கோவிலில் மழை பெய்வதற்கான அறிகுறிகள் தென்பட்டன. அதற்கேற்ப வானம் மப்பும், மந்தாரமுமாக காட்சி அளித்தது.

நேற்று காலை 8 மணி வரையிலான 24 மணி நேரத்தில் பெய்த மழை அளவு விவரம் (மி.மீ) வருமாறு:-

பேச்சிப்பாறை 40.6, பெருஞ்சாணி 10.4, புத்தன் அணை 9.2, சிற்றார் 1-24.6, சிற்றார் 2-9, மாம்பழத்துறையாறு 20, பூதப்பாண்டி 5.8, களியல் 10.4, குழித்துறை 16.4, சுருளக்கோடு 5, தக்கலை 16, குளச்சல் 12.8, பாலமோர் 19.2, கோழிப்போர்விளை 15, அடையாமடை 25, முள்ளங்கினாவிளை 13, ஆனைக்கிடங்கு 17.2 என்ற அளவில் மழை பதிவாகி இருந்தது.

தண்ணீர் வரத்து

இந்த மழையால் நேற்று காலை பேச்சிப்பாறை அணைக்கு வினாடிக்கு 206 கன அடி தண்ணீரும், பெருஞ்சாணி அணைக்கு 57 கன அடி தண்ணீரும், சிற்றார்-1 அணைக்கு 32 கன அடி தண்ணீரும், சிற்றார்-2 அணைக்கு 54 கன அடி தண்ணீரும், மாம்பழத்துறையாறு அணைக்கு 5 கன அடி தண்ணீரும் வந்து கொண்டிருந்தது. இதில் பெருஞ்சாணி அணையில் இருந்து 30 கன அடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது. மற்ற அணைகள் மூடப்பட்டுள்ளன.

48 அடி கொள்ளளவு கொண்ட பேச்சிப்பாறை அணையின் நீர்மட்டம் 31.55 அடியாகவும், 77 அடி கொள்ளளவு கொண்ட பெருஞ்சாணி அணையின் நீர்மட்டம் 30.75 அடியாகவும், தலா 18 அடி கொள்ளளவு கொண்ட சிற்றார்-1 அணையின் நீர்மட்டம் 8.43 அடியாகவும், சிற்றார்-2 அணையின் நீர்மட்டம் 8.53 அடியாகவும், 42.65 அடி கொள்ளளவு கொண்ட பொய்கை அணையின் நீர்மட்டம் 15.90 அடியாகவும், 54.12 அடி கொள்ளளவு கொண்ட மாம்பழத்துறையாறு அணையின் நீர்மட்டம் 44.13 அடியாகவும் உள்ளன. நாகர்கோவில் நகரின் குடிநீர்த்தேவையை பூர்த்தி செய்து வரும் 25 அடி கொள்ளளவு கொண்ட முக்கடல் அணையின் நீர்மட்டம் 1.1 அடியாக உள்ளது.

தொடர் மழையால் அகஸ்தீஸ்வரம் தாலுகாவில் ஒரு வீடு முழுமையாகவும், விளவங்கோடு தாலுகாவில் ஒரு வீடு முழுமையாகவும், ஒரு வீடு பகுதியாகவும் என மொத்தம் 3 வீடுகள் சேதம் அடைந்துள்ளன.

விவசாயிகள் உற்சாகம்

குமரி மாவட்டத்தில் ஆண்டுதோறும் இருபோக நெல் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. அதில் முதல்போக சாகுபடியான கன்னிப்பூ சாகுபடியை மே மாத இறுதியில் அல்லது ஜுன் மாதம் முதல் வாரத்தில் தொடங்குவது வழக்கம்.

இந்த ஆண்டு குமரி மாவட்ட அணைகளில் போதுமான தண்ணீர் இருப்பதாலும், கடந்த சில நாட்களாக மழை பெய்து வருவதாலும் விவசாயிகள் உற்சாகம் அடைந்துள்ளனர். பெரும்பாலான விவசாயிகள் கன்னிப்பூ சாகுபடிக்கான முன்னேற்பாட்டு பணிகளில் நிலத்தை சமப்படுத்துவது, உழவுப்பணி மேற்கொள்வது போன்ற பணிகளில் ஈடுபட்டு வருகிறார்கள். நேற்று சுசீந்திரம் பகுதிகளில் ஏராளமான விவசாயிகள் உழவு பணியில் ஈடுபட்டதை காண முடிந்தது.

Next Story