விலங்குகளை வேட்டையாட முயற்சி; நாயுடன் 4 பேர் பிடிபட்டனர் ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது


விலங்குகளை வேட்டையாட முயற்சி; நாயுடன் 4 பேர் பிடிபட்டனர் ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது
x
தினத்தந்தி 11 May 2020 7:50 AM IST (Updated: 11 May 2020 7:50 AM IST)
t-max-icont-min-icon

பூதப்பாண்டி சரக வனப்பகுதியில் வேட்டை நாயுடன் நுழைந்த 4 பேர் சிக்கினர். அவர்களுக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதித்து வனத்துறையினர் அதிரடி நடவடிக்கை எடுத்தனர்.

ஆரல்வாய்மொழி, 

பூதப்பாண்டி சரக வனப்பகுதியில் வேட்டை நாயுடன் நுழைந்த 4 பேர் சிக்கினர். அவர்களுக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதித்து வனத்துறையினர் அதிரடி நடவடிக்கை எடுத்தனர்.

வேட்டையாடுவதாக தகவல்

கொரோனா பரவலை தடுக்க பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு காலத்தில் மலையடிவார பகுதியில் உள்ள மக்கள் சிலர், வனப்பகுதிக்குள் நுழைந்து வேட்டையாடுவதாக பல புகார்கள் வந்தன. இதனால் வனத்துறையினர் தீவிர கண்காணிப்பில் உள்ளனர்.

இந்த நிலையில் பூதப்பாண்டி வனசரகத்திற்கு உட்பட்ட தெற்கு மலை பகுதி காப்புகாட்டில் இரவு நேரத்தில் வன விலங்குகள் வேட்டையாடப்படுவதாக வனத்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து பூதப்பாண்டி வனச்சரகர் திலீபன் உத்தரவின் பேரில் வனவர் பிரசன்னா, வன காப்பாளர்கள் கிருஷ்ணகுமார், பிரபாகர், வேட்டை தடுப்பு காவலர்கள் ஜெகன், பிரவின் ஆகியோர் அந்த பகுதியில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

4 பேர் சிக்கினர்

அப்போது ‘டார்ச்லைட்‘ வெளிச்சத்தில் வேட்டை நாயுடன் சிலர் சுற்றி திரிந்தது தெரிய வந்தது. உடனே அந்த பகுதியை நோக்கி வனத்துறையினர் விரைந்து சென்றனர். வனத்துறையை கண்டதும் வேட்டையாட வந்தவர்கள் தப்பி ஓடினர்.

ஆனாலும், வனத்துறையினர் விடாமல் துரத்தினர். இதில் 4 பேர் சிக்கினர். ஒருவர் தப்பி ஓடி விட்டார். வேட்டை நாயும் பிடிபட்டது.

இதனையடுத்து விசாரணை நடத்தியதில், வேட்டையாட முயன்றவர்கள் மாடன்பிள்ளை தர்மத்தை சேர்ந்த மணிகண்டன் (வயது 20), ராஜகிருஷ்ணபுரம் ஆபிரகாம் வீனஸ் (22), ஆன்டனி லியோன் (19), ஜேம்ஸ் டவுன் மட்டுவிளை ஜேக்கப் பினோ (22) என்பதும், தப்பி ஓடியவர் மாடன்பிள்ளை தர்மத்தை சேர்ந்த ராஜா (21) என்பதும் தெரிய வந்தது. வேட்டையாட முயன்ற 4 பேருக்கும் தலா ரூ.25 ஆயிரம் என மொத்தம் ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.

Next Story