ஆடம்பரம் இல்லாமல் நடைபெறும் சுப நிகழ்ச்சிகள் மேடை அலங்காரம் செய்யும் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிப்பு
ஊரடங்கால் ஆடம்பரம் இல்லாமல் சுபநிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. இதனால் மேடை அலங்காரம் செய்யும் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.
திருச்சி,
ஊரடங்கால் ஆடம்பரம் இல்லாமல் சுபநிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. இதனால் மேடை அலங்காரம் செய்யும் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.
ஊரடங்கு உத்தரவு
கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு 1½ மாதங்கள் கடந்து விட்டன. இந்த காலகட்டத்தில் பல்வேறு தொழில்கள் முடங்கி போய்விட்டன. குறிப்பாக திருமணம் போன்ற சுபநிகழ்ச்சிகளுக்கு மேடை அலங்காரம் செய்யும் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாக மாறிவிட்டது.
திருமணம் போன்ற சுபநிகழ்ச்சிகள் என்றாலே 6 மாதம் முதல் ஒரு வருடம் வரை திட்டமிட்டு தான் செய்வார்கள். அதிலும் திருமணத்துக்கு தேர்ந்தெடுக்கப்படும் உடைகள், உணவு வகைகள், மண்டபத்தின் மேடை அலங்காரம் என ஒவ்வொன்றையும் பார்த்து, பார்த்து தடபுடலாக செய்வார்கள். தங்களது வீட்டு சுபநிகழ்ச்சிக்கு வரும் உறவினர்கள், நண்பர்கள் எளிதில் அந்த நிகழ்ச்சியை மறக்கக்கூடாது என நிகழ்ச்சி நடத்துபவர்கள் எதிர்பார்ப்பார்கள்.
எளிமையாக நடக்கும் சுபநிகழ்ச்சிகள்
குறிப்பாக திருமண மண்டபத்துக்கு வரும் உறவினர்களின் கண்களை கவர வேண்டும் என்பதற்காக கலைநயத்துடன் கூடிய மேடை அலங்காரம் அமைக்க முனைப்பு காட்டுவார்கள். இது அவரவர் வசதிக்கு ஏற்ப வித, விதமான வகைகளில் அலங்காரங்கள் செய்து ஆடம்பரமாக நிகழ்ச்சிகள் நடத்துவார்கள்.
சுபநிகழ்ச்சிகளுக்கான மேடை அலங்காரம், ஒலி-ஒளி அமைத்தல், பந்தல் போடுதல், போட்டோ-வீடியோ, சமையல் தொழிலாளர்கள், ஒப்பனை கலைஞர்கள் என ஏராளமான தொழிலாளர்கள் இந்த தொழிலை நம்பி உள்ளனர். இதன் மூலம் கிடைக்கும் வருமானத்தை வைத்து தங்களது குடும்பத்தை நடத்தி வருகிறார்கள். தற்போது ஊரடங்கு காரணமாக பல்வேறு திருமணங்கள் உறவினர்களின் கூட்டமின்றி கோவில் முன்பும், வீடுகளிலும் எளிய முறையில் நடைபெறுகிறது.
பெரும்பாலான திருமணங்களை ஊரடங்கு முடிந்ததும் வைத்து கொள்ளலாம் என ஒத்திவைத்து விட்டனர். இதன் காரணமாக இந்த தொழிலை நம்பி உள்ள தொழிலாளர்கள் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து குடும்பம் நடத்தவே கடும் சிரமப்பட்டு வருகிறார்கள். திருச்சி மாவட்டத்தில் சுமார் 5 ஆயிரம் தொழிலாளர்கள் இந்த தொழிலை நம்பி பிழைத்து கொண்டு இருந்தனர். இப்போது அவர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி உள்ளது.
நலிவடைந்த தொழில்
இதுகுறித்து தமிழ்நாடு டென்ட் டீலர்ஸ் மற்றும் டெக்கரேட்டர்ஸ் நல சங்க திருச்சி மாவட்ட பொதுச்செயலாளர் வெங்கடேஷ்பாபு கூறுகையில், “ஆண்டுதோறும் ஏப்ரல், மே, ஜூன் மாதங்களில் தான் எங்களுக்கு சுப நிகழ்ச்சிகளுக்கான ஆர்டர் வரும். ஆடி மாதம் தொடங்கி விட்டால் சுபநிகழ்ச்சிகள் நடக்காது. ஆனால் இந்தாண்டு திருமண சீசன் நடைபெறும் காலகட்டத்தில் கொரோனா தாக்கத்தால் எங்கள் தொழில் முழுவதுமாக நலிவடைந்துவிட்டது.
திருமண மண்டபத்தை முன்பதிவு செய்துவிட்டு, மேடை அலங்காரத்துக்கு அட்வான்ஸ் கொடுத்தவர்கள் கூட திடீரென முடிவை மாற்றி கொண்டு அட்வான்ஸ் தொகையை திருப்பி கேட்கிறார்கள். தமிழக அரசு ஊரடங்கில் இருந்து பல்வேறு தளர்வுகளை அறிவிக்கும்போது, எங்களது தொழில் பாதிக்காத வகையில் சமூக இடைவெளியை கடைபிடித்து சுப நிகழ்ச்சிகளை நடத்தி கொள்ள அனுமதி வழங்கினால், வரும் மாதத்தில் கிடைக்கும் ஆர்டர்கள் மூலம் தொழிலாளர்கள் பலர் பிழைத்து கொள்வார்கள்” என்றார்.
Related Tags :
Next Story