மதுரையில் கூடுதலாக திறக்கப்படும் கடைகள் - கலெக்டர் அறிவிப்பு


மதுரையில் கூடுதலாக திறக்கப்படும் கடைகள் - கலெக்டர் அறிவிப்பு
x
தினத்தந்தி 11 May 2020 3:30 AM IST (Updated: 11 May 2020 8:35 AM IST)
t-max-icont-min-icon

மதுரையில் பாத்திரக் கடை உள்ளிட்ட சில கூடுதல் கடைகளை திறக்க அனுமதி வழங்கப் பட்டுள்ளதாக கலெக்டர் வினய் அறிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

மதுரை,

மதுரை மாவட்டத்தில் பல்வேறு பணிகளுக்கு வரைமுறைகளுடன் ஏற்கனவே அனுமதி அளிக்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக மதுரை மாவட்டம் முழுவதும் நோய் கட்டுப்பாட்டு பகுதிகளை தவிர பிற பகுதிகளில் முதல்-அமைச்சர் உத்தரவின்படி இன்று (திங்கட்கிழமை) முதல் குறிப்பிட்ட நேரத்தில் கடைகள் செயல்பட அனுமதிக்கப்படுகிறது.

அதன்படி அத்தியாவசிய பொருட்களான காய்கறிகள், மளிகைப் பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள் காலை 6 மணி முதல் இரவு 7 மணி வரையும், பெட்ரோல் நிலையங்கள் காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரையும் செயல்படலாம். தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் உள்ள பெட்ரோல் பங்க்குகள் 24 மணி நேரமும் செயல்பட அனுமதிக்கப்படுகிறது. அனைத்து நிறுவனங்களும் 33 சதவீத பணியாளர்களுடன் காலை 10 மணி முதல் இரவு 7 மணி வரை செயல்படலாம்.

கீழ்க்கண்ட பிற தனிக்கடைகள் காலை 10 மணிமுதல் இரவு 7 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படுகிறது. அதன்படி டீக்கடைகள் (பார்சல் மட்டும்), பேக்கரிகள் (பார்சல் மட்டும்), உணவகங்கள் (பார்சல் மட்டும்), பூ, பழம், காய்கறி மற்றும் பலசரக்கு கடைகள், கட்டுமானப் பொருட்கள் விற்கும் கடைகள், சிமெண்டு, ஹார்டுவேர், சானிடரிவேர் கடைகள், மின் சாதனப் பொருட்கள் மற்றும் பழுதுநீக்கும் கடைகள், செல்போன் விற்கும் மற்றும் பழுதுநீக்கும் கடைகள், கம்ப்யூட்டர் விற்பனை மற்றும் பழுதுநீக்கும் கடைகள், வீட்டு உபயோக எந்திரங்கள் மற்றும் வீட்டு உபயோக பொருட்கள் விற்கும் கடைகள், மோட்டார் எந்திரங்கள் மற்றும் பழுதுநீக்கும் கடைகள், கண் கண்ணாடி மற்றும் பழுதுநீக்கும் கடைகள், குளிர்சாதன வசதி இல்லாத சிறிய நகைக் கடைகள் மற்றும் சிறிய ஜவுளிக் கடைகள் (ஊரக பகுதிகளில் மட்டும்).

மிக்ஸி, கிரைண்டர் பழுது நீக்கும் கடைகள், டி.வி விற்பனை மற்றும் டி.வி பழுதுநீக்கும் கடைகள், பெட்டிக்கடைகள், பர்னிச்சர் கடைகள், சாலையோர தள்ளுவண்டி கடைகள், உலர் சலவையகங்கள், கூரியர் மற்றும் பார்சல் சர்வீஸ், லாரி புக்கிங் சர்வீஸ், ஜெராக்ஸ் கடைகள், 2 சக்கர மற்றும் நான்கு சக்கர வாகன விற்பனை நிலையங்கள் மற்றும் பழுது நீக்கும் கடைகள், நாட்டு மருந்து விற்பனை கடைகள், விவசாய இடுபொருட்கள் மற்றும் பூச்சிமருந்து விற்பனை கடைகள், டைல்ஸ் கடைகள், பெயிண்ட் கடைகள், எலக்ட்ரிகல் கடைகள், ஆட்டோமொபைல் உதிரிபாகங்கள் விற்பனை கடைகள், நர்சரி கார்டன்கள், மரக்கடைகள் மற்றும் பிளைவுட் கடைகள், மரம் அறுக்கும் கடைகள் திறக்கலாம்.

இந்த கடைகளை தவிர்த்து மாவட்ட பேரிடர் மேலாண்மை குழுக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டவாறு மதுரை மாநகராட்சிப் பகுதிகளில் கூடுதலாக அனுமதிக்கப்படும் வணிக நிறுவனங்கள் மற்றும் தொழில்கள் விவரம் பின்வருமாறு:-

நோட்டுப்புத்தக உற்பத்தி நிறுவனம், போர்வெல் எந்திர செயல்பாடு, பேப்பர் மொத்த வணிகம், பாத்திரக்கடை, புத்தகக்கடை, போட்டோ ஸ்டூடியோ, எழுது பொருள் விற்பனைக்கடை ஆகியவை திறக்கலாம்.

தமிழக அரசால் அறிவுறுத்தப்பட்ட மேற்சொன்ன கடைகள், நிறுவனங்களில் பணியாளர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் அனைவரும் முகக்கவசம் அணிய வேண்டும். தனிநபர் இடைவெளியை பின்பற்ற வேண்டும். அடிக்கடி போதுமான கிருமிநாசினிகளை தெளிக்க வேண்டும். பணியாளர்கள் பாதுகாப்பாக பணிபுரிவதை உறுதிப்படுத்த வேண்டும். கடைகளில் குளிர்சாதன வசதி இருந்தால் அதனை இயக்க அனுமதி இல்லை. முடிதிருத்தும் நிலையங்கள் (சலூன்கள்), ஸ்பா மற்றும் பியூட்டி பார்லர்கள் ஆகியவை திறக்கக்கூடாது.

இவ்வாறு கலெக்டர் தெரிவித்துள்ளார்.

Next Story