பொள்ளாச்சியில், சமூக இடைவெளிக்கு ஏற்பாடு செய்யாத 2 கடைக்காரர்கள் மீது வழக்கு - போலீசார் நடவடிக்கை


பொள்ளாச்சியில், சமூக இடைவெளிக்கு ஏற்பாடு செய்யாத 2 கடைக்காரர்கள் மீது வழக்கு - போலீசார் நடவடிக்கை
x
தினத்தந்தி 11 May 2020 4:00 AM IST (Updated: 11 May 2020 8:35 AM IST)
t-max-icont-min-icon

பொள்ளாச்சியில் சமூக இடைவெளிக்கு ஏற்பாடு செய்யாத 2 கடைக்காரர்கள் மீது வழக்குபதிவு செய்து போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

பொள்ளாச்சி,

கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக கொரோனாவை கட்டுப்படுத்த ஊரடங்கு வருகிற 17-ந் தேதி வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது. சில தளர்வுகள் செய்யப்பட்டாலும், கடைகளில் வாடிக்கையாளர்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும், அதற்கு கடைக்காரர்கள் ஏற்பாடு செய்ய வேண்டும் என்று மத்திய, மாநில அரசுகள் அறிவுறுத்தி உள்ளன. அதன்படி பொள்ளாச்சி பகுதியில் உள்ள கடைகளில் சமூக இடைவெளிக்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளதா? என்று கண்காணிக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் பொள்ளாச்சி துணை சூப்பிரண்டு சிவக்குமார் உத்தரவின் பேரில் மேற்கு போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் வைரம் மேற்பார்வையில் சப்-இன்ஸ்பெக்டர் கார்த்திக்குமார் தலைமையிலான போலீசார் பொள்ளாச்சி மார்க்கெட் ரோடு, காந்தி மார்க்கெட் பகுதியில் உள்ள இறைச்சி கடைகள், மளிகை கடைகளில் நேற்று ஆய்வு மேற்கொண்டனர். அப்போது கடைக்காரர்களுக்கு கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து அறிவுறுத்தப்பட்டது.

இதற்கிடையில் சமூக இடைவெளிக்கு ஏற்பாடு செய்யாத கடைக்காரர்கள் மீது வழக்குபதிவு செய்யப்பட்டது. இதுகுறித்து போலீஸ் அதிகாரிகள் கூறியதாவது:-

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக கடைகளில் வாடிக்கையாளர்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு உள்ளது. ஆனால் சில கடைகளை தவிர பெரும்பாலும் யாரும் சமூக இடைவெளியை கடைபிடிப்பதில்லை. அதற்கு கடைக்காரர்கள் ஏற்பாடு செய்யவில்லை. பொள்ளாச்சி மேற்கு போலீஸ் நிலைய பகுதியில் சமூக இடைவெளிக்கு ஏற்பாடு செய்யாத 2 கடைக்காரர்கள் மீது வழக்குபதிவு செய்யப்பட்டு உள்ளது.

கொரோனா பரவுவதை தடுக்க கடைக்காரர்கள் முகக்கவசம், கையுறை அணிந்து வியாபாரம் செய்ய வேண்டும். முகக்கவசம் இல்லாமல் வரும் வாடிக்கையாளர்களுக்கு பொருட்கள் வழங்கக்கூடாது. தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றாத கடைக்காரர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

Next Story