அ.தி.மு.க. பெண் கவுன்சிலரிடம் பணம்கேட்டு மிரட்டல் - புதிய தமிழகம் கட்சி நிர்வாகி கைது


அ.தி.மு.க. பெண் கவுன்சிலரிடம் பணம்கேட்டு மிரட்டல் - புதிய தமிழகம் கட்சி நிர்வாகி கைது
x
தினத்தந்தி 11 May 2020 10:13 AM IST (Updated: 11 May 2020 10:13 AM IST)
t-max-icont-min-icon

ராமநாதபுரத்தில் அ.தி.மு.க. பெண் கவுன்சிலரிடம் பணம் கேட்டு மிரட்டிய புதிய தமிழகம் கட்சி மாவட்ட நிர்வாகி கைது செய்யப்பட்டார்.

ராமநாதபுரம்,

ராமநாதபுரம் அருகே உள்ள காரேந்தல் பகுதியை சேர்ந்த குப்புராமன் மனைவி மாணிக்கசாரதி(வயது 52). ராமநாதபுரம் ஊராட்சி ஒன்றிய 6-வது வார்டு அ.தி.மு.க. கவுன்சிலராக உள்ளார். இவருக்கும் ராமநாதபுரம் ஆர்.காவனூர் காளிமுத்து மகன் அஜிஸ்பாய் என்ற சவுந்தர்ராஜன்(32) என்பவருக்கும் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடுவது தொடர்பாக முன்விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

சவுந்தர்ராஜன் ராமநாதபுரம் கிழக்கு மாவட்ட புதிய தமிழகம் கட்சியின் செயலாளராக இருந்து வருகிறார். இந்த நிலையில் நேற்று முன்தினம் சவுந்தர்ராஜன் மோட்டார் சைக்கிளில் காரேந்தல் பகுதிக்கு சென்று நிவாரண உதவிகள் வழங்குவதற்கு ரூ.10,000 தரவேண்டும் என்று கேட்டாராம்.

இதற்கு அவர் மறுத்ததால் கீழே தள்ளிவிட்டு கத்தியை காட்டி கொலை செய்துவிடுவதாக மிரட்டினாராம். கீழே விழுந்ததில் காயமடைந்த மாணிக்க சாரதி கத்தி கூச்சலிடவே அக்கம் பக்கத்தினர் திரண்டு வந்துள்ளனர். இதனால் சவுந்தர்ராஜன் மோட்டார் சைக்கிளையும், கத்தியையும் போட்டுவிட்டு தப்பி ஓடிவிட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து மாணிக்கசாரதி ராமநாதபுரம் பஜார் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜோதிமுருகன் வழக்குபதிவு செய்து சவுந்தர்ராஜனை கைது செய்தார்.

Next Story