கொரோனா தடுப்பு நடவடிக்கை: 2,570 புதிய நர்சுகள் 3 நாட்களுக்குள் பணியில் சேருவார்கள் அமைச்சர் விஜயபாஸ்கர் பேட்டி
2,570 புதிய நர்சுகள் 3 நாட்களுக்குள் பணியில் சேருவார்கள் என அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.
புதுக்கோட்டை,
2,570 புதிய நர்சுகள் 3 நாட்களுக்குள் பணியில் சேருவார்கள் என அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.
சிறப்பு மருத்துவமனைகள்
சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் புதுக்கோட்டை கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்த போது கூறியதாவது:-
புதுக்கோட்டை மாவட்டத்தில் 5 கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் மாவட்ட நிர்வாகம் மூலம் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தமிழகத்தில் கொரோனா சிகிச்சைக்காக 22 அரசு சிறப்பு மருத்துவமனைகள் இயங்கி வருகிறது. மாவட்ட அளவில் பிற மருத்துவமனைகளிலும் வசதிகள் மேம்படுத்தப்பட்டு வருகிறது.
ஒருங்கிணைந்த சிகிச்சை முறை, ஆரோக்கிய உணவு முறைகள் உள்ளிட்டவைகள் கொரோனா சிகிச்சைக்கு நல்ல பலனை கொடுக்கிறது. இந்திய அளவில் தமிழகத்தில் கொரோனா இறப்பு விகிதத்தை 0.68 சதவீதமாக குறைத்து உள்ளதற்காக மத்திய அரசு மற்றும் மத்திய மருத்துவ குழுவினர் பாராட்டி உள்ளனர்.
2,570 நர்சுகள்
தமிழகத்தில் அதிக பரிசோதனை மேற்கொள்ளப்படுவதால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்த எண்ணிக்கையை கட்டுப்படுத்தி, தாக்கத்தில் இருந்து மீளுவதற்கான அனைத்து நடவடிக்கைகளும் உலக சுகாதார அமைப்பின் வழிமுறைப்படி செயல்படுத்தப்படுகிறது. மருத்துவ பணியாளர் தேர்வாணையம் மூலம் ஏற்கனவே தேர்வு எழுதி மதிப்பெண்கள் பெற்று காத்திருப்பு பட்டியலில் இருந்த 2,570 நர்சுகள் தற்காலிக பணி நியமனம் செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் 3 நாட்களுக்குள் பணியில் சேர அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் கொரோனா தடுப்பு பணிக்கு கூடுதல் பலம் கிடைக்கும்.
வெளிநாடுகளில் இருந்து விமானங்கள் மூலம் வருபவர்களுக்கு விமானநிலையத்தில் பரிசோதனை கருவிகள் மூலம் சோதனை நடத்தப்படுகிறது. அவர்களை பரிசோதனை நடத்தி தனிமைப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அதிக பரிசோதனை
பி.சி.ஆர். கிட் உள்ளிட்டவற்றிற்கு தேவையான நிதியை முதல்-அமைச்சர் ஒதுக்கீடு செய்து வருகிறார். இதில் 4 லட்சம் பி.சி.ஆர். கருவிகள் ஆர்டர் கொடுக்கப்பட்டுள்ளது. இந்தியாவிலேயே கொரோனா பரிசோதனை அதிகமாக நடைபெறக்கூடிய மாநிலமாக தமிழகம் உள்ளது. சாதாரண சளி, இருமல் இருந்தால் உடனடியாக அவர்களுக்கு பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story