ஊரடங்கு உத்தரவை மீறி கிரிக்கெட்: ஹெலி கேமராவை கண்டு தெறித்து ஓடிய இளைஞர்கள்
ஆண்டிமடத்தில் ஊரடங்கு உத்தரவை மீறி கிரிக்கெட் விளையாடிய இளைஞர்கள், ஹெலி கேமராவை கண்டு தெறித்து ஓடினர்.
ஆண்டிமடம்,
ஆண்டிமடத்தில் ஊரடங்கு உத்தரவை மீறி கிரிக்கெட் விளையாடிய இளைஞர்கள், ஹெலி கேமராவை கண்டு தெறித்து ஓடினர்.
சுற்றித்திரியும் இளைஞர்கள்
அரியலூர் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதில் சென்னை கோயம்பேடு பகுதியில் இருந்து சொந்த ஊருக்கு திரும்பிய பலரும் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் கொரோனா வைரஸ் பரவலை தடுக்க மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் அத்தியாவசிய தேவைகளுக்காக வீட்டிற்கு ஒருவர் மட்டுமே வெளியே வர வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால் ஊரடங்கு உத்தரவை பொருட்படுத்தாமல் ஆண்டிமடம் சுற்றுவட்டார பகுதிகளில் இளைஞர்கள் கிரிக்கெட் விளையாடுவது, வாகனங்களில் சுற்றித்திரிவது, சமூக இடை வெளியை கடைப்பிடிக்காதது போன்ற செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதையடுத்து மாவட்ட நிர்வாகம் சார்பில், விதிகளை மீறும் இளைஞர்களை கட்டுப்படுத்தும் விதமாக கடந்த 2 நாட்களாக ஹெலி கேமரா மூலம் கண்காணிக்கும் பணியை ஆண்டிமடம் போலீசார்் மேற்கொண்டு வந்தனர்.
வீடியோ வெளியீடு
இந்நிலையில் ஹெலி கேமராவை கண்டு தெறித்து ஓடிய இளைஞர்களின் வீடியோவை ஆண்டிமடம் போலீசார் நேற்று வெளியிட்டனர். அதில் பதிவாகியிருந்த காட்சியில், ஆண்டிமடம் சுற்றுவட்டார பகுதியிலும், ஆண்டிமடம் அருகே உள்ள மைதானத்திலும் கிரிக்கெட் விளையாடிக்கொண்டிருந்த 20-க்கும் மேற்பட்ட இளைஞர்கள், ஹெலி கேமராவை கண்டதும் தலைதெறிக்க ஓடினர். 3 இளைஞர்கள் தங்களது மோட்டார் சைக்கிளை எடுத்துக் கொண்டு அங்கிருந்து விரைந்தனர்.
கிரிக்கெட் ‘பேட்‘டை எடுத்துச்சென்ற ஒரு இளைஞர், அதை கீழே தவறவிடுவதும், பின்னர் அதனை எடுத்துக்கொண்டு தலைதெறிக்க ஓடும் காட்சியும் அதில் பதிவாகியிருந்தது. இதேபோல் ஹெலி கேமராவை கண்டு ஓடி ஒழிய முயன்ற சில இளைஞர்கள், கேமரா அவர்கள் அருகில் வருவதை கண்டதும் மீண்டும் ஓட்டம் பிடித்ததும், அதில் பதிவாகியிருந்தது. ஹெலி கேமராவை தொடர்ந்து சென்ற ஆண்டிமடம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெகதீசன், இளைஞர்களுக்கு அறிவுரை கூறி அனுப்பி வைத்ததாக போலீசார் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story