மாணவிகளின் வாழ்க்கையை சீரழித்ததாக 3 வாலிபர்கள் மீது புகார் கூறி வலைதளங்களில் அவதூறு


மாணவிகளின் வாழ்க்கையை சீரழித்ததாக 3 வாலிபர்கள் மீது புகார் கூறி வலைதளங்களில் அவதூறு
x
தினத்தந்தி 11 May 2020 12:07 PM IST (Updated: 11 May 2020 12:07 PM IST)
t-max-icont-min-icon

பள்ளி, கல்லூரி மாணவிகளின் வாழ்க்கையை சீரழித்ததாக 3 வாலிபர்கள் மீது அவதூறு கூறி வலைதளங்களில் பரவும் தகவல் குறித்து போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது.

மதுரை,

மதுரை தல்லாகுளம் பகுதியில் உள்ள பள்ளி, கல்லூரியில் படிக்கும் மாணவிகளை 3 வாலிபர்கள் தவறான வழியில் ஈடுபடுத்துவதாக சமூக வலைதளத்தில் ஒரு செய்தி வேகமாக பரவி வருகிறது. அதில் அந்த வாலிபர்கள் தங்களது செல்போன் மற்றும் சிக்கன் கடைக்கு வரும் மாணவிகளிடம் பல்வேறு சலுகை கொடுப்பதாக கூறி செல்போன் எண்களை வாங்கி கொள்கிறார்கள். பின்னர் அந்த மாணவிகள் கொடுத்த எண் மூலம் அவர்களிடம் பேசியும், குறுஞ்செய்தி அனுப்பியும் அவர்களை தன்வசப்படுத்துகிறார்கள்.

பின்னர் அந்த மாணவிகளை ஊர் சுற்ற அழைத்து சென்று அங்கு குளிர்பானத்தில் மயக்க மருந்தை கலந்து கொடுத்து அவர்களை சீரழிக்கிறார்கள். பின்னர் அதனை ரகசியமாக படம் எடுத்து அவர்களை மிரட்டி தவறான வழியில் பயன்படுத்துகிறார்கள். எனவே பெற்றோர்கள் இந்த விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும்.

இவ்வாறு சமூக வலைதளத்தில் பரவி வருகிறது.

மேலும் இவ்வாறு செயல்படும் அந்த வாலிபர்களின் பெயர், செல்போன் எண் என்று அனைத்து தகவல்களையும் வலைதளத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதை அறிந்த சம்பந்தப்பட்ட வாலிபர்கள் தனித்தனியாக நேற்று காலை மதுரை தல்லாகுளம் போலீஸ் நிலையத்திற்கு நேரில் வந்து தங்களை பற்றி அவதூறான தகவல்கள் வலைதளத்தில் பரப்பி விடப்படுவதாகவும், சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் புகார் கொடுத்தனர். போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்தி அவர்கள் கொடுத்த புகாருக்கு மனுரசீது கொடுத்து அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் போலீசாரிடம் கேட்ட போது பாதிக்கப்பட்ட பெண்கள் யாரும் இதுவரை எவ்வித புகாரும் கொடுக்கவில்லை. நாங்கள் விசாரணை நடத்தியதில் தொழில் போட்டி காரணமாக சிலர் இந்த செயலை செய்துள்ளதாக தெரியவருகிறது. அவர்கள் யார் என்பதை விசாரித்து வருகிறோம் என்றனர்.

Next Story