ஆண்டிப்பட்டியில் அமைக்கப்பட்டுள்ள தனிமைப்படுத்தும் முகாமில் கலெக்டர் திடீர் ஆய்வு


ஆண்டிப்பட்டியில் அமைக்கப்பட்டுள்ள தனிமைப்படுத்தும் முகாமில் கலெக்டர் திடீர் ஆய்வு
x
தினத்தந்தி 11 May 2020 1:14 PM IST (Updated: 11 May 2020 1:14 PM IST)
t-max-icont-min-icon

ஆண்டிப்பட்டியில் அமைக்கப்பட்டுள்ள தனிமைப்படுத்தும் முகாமில் கலெக்டர் பல்லவி பல்தேவ் நேற்று திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

தேனி, 

வெளி மாநிலங்களில் இருந்து தேனி மாவட்டத்துக்கு வருபவர்கள் ஆண்டிப்பட்டி வழியாகவும், வெளி மாவட்டங்களில் இருந்து தேனி மாவட்டத்துக்கு வருபவர்கள் தேவதானப்பட்டி காட்ரோடு சோதனை சாவடி வழியாகவும் தான் வர வேண்டும் என்று மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. வெளி மாநிலம், மாவட்டங்களில் இருந்து இந்த இரண்டு இடங்களுக்கு வரும் நபர்கள் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்படுகிறது.

பரிசோதனை முடிவு வரும் வரையில் அவர்கள் அப்பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள தனிமைப்படுத்தும் முகாமில் தங்க வைக்கப்படுகின்றனர். அந்த வகையில் வெளி மாநிலங்களில் இருந்து தேனி மாவட்டத்துக்கு திரும்பி வருபவர்களுக்கு ஆண்டிப்பட்டி சோதனை சாவடியில் பரிசோதனை நடத்தப்பட்டு, அவர்கள் அப்பகுதியில் உள்ள ஒரு கல்லூரியில் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர். இந்த தனிமைப்படுத்தும் முகாமில் மாவட்ட கலெக்டர் பல்லவி பல்தேவ் நேற்று திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

அந்த முகாமில் மராட்டிய மாநிலம், சாங்கிலி மாவட்டத்துக்கு பல்வேறு பணிகளுக்காக சென்றுவிட்டு திரும்பியவர்கள் தங்க வைக்கப்பட்டு உள்ளனர். அவர்களிடம் சமூக இடைவெளியை பின்பற்றி பேசிய கலெக்டர், அவர்களுக்கான அடிப்படை வசதிகள் கிடைக்கிறதா? என்று கேட்டறிந்தார். மேலும் குறைகள் ஏதேனும் இருந்தால் தெரிவிக்கும்படியும் கூறினார். பின்னர் அவர்களிடம், “பரிசோதனை முடிவு வரும் வரை இங்கு தங்கி இருக்க வேண்டும். பரிசோதனை முடிவில் பாதிப்பு இல்லை என்று தெரிய வந்த பின்னர் நீங்கள் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்படுவீர்கள்.

அவ்வாறு வீடுகளுக்கு சென்றாலும் 28 நாட்களுக்கு உங்களை தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என்று அறிவுரை வழங்கினார். முன்னதாக ஆண்டிப்பட்டி சோதனை சாவடியை கலெக்டர் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது, கொடைக்கானல் செல்லும் வெளி மாநில நபர்கள் குறித்த விவரங்களை உடனுக்குடன் திண்டுக்கல் மாவட்ட நிர்வாகத்துக்கு தெரிவிக்க வேண்டும் என்று கலெக்டர் உத்தரவிட்டார்.

இந்த ஆய்வின் போது பெரியகுளம் சப்-கலெக்டர் சினேகா, ஆண்டிப்பட்டி தாசில்தார் சந்திரசேகர் ஆகியோர் உடன் இருந்தனர்.

Next Story