தேனி மாவட்டத்தில், மேலும் 3 பேருக்கு கொரோனா - பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 59 ஆக உயர்வு
தேனி மாவட்டத்தில் மேலும் 3 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 59 ஆக உயர்ந்துள்ளது.
தேனி,
தேனி மாவட்டத்தில் 56 பேருக்கு நேற்று முன்தினம் வரை கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு இருந்தது. அவர்களில் போடியை சேர்ந்த பெண் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். 42 பேர் சிகிச்சை பெற்று குணமாகி வீடு திரும்பினர். சென்னை கோயம்பேடு மார்க்கெட்டுக்கு சென்று திரும்பியவர்கள் தொடர்ச்சியாக கொரோனா பாதிப்புக்குள்ளாகி உள்ளனர். இந்நிலையில் தேனி மாவட்டத்தில் நேற்று மேலும் 3 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்டவர்கள் தேனி அருகே உள்ள மாரியம்மன்கோவில்பட்டி, ஆண்டிப்பட்டி அருகே உள்ள தேக்கம்பட்டி, உத்தமபாளையம் ஆகிய பகுதிகளை சேர்ந்தவர்கள். மாரியம்மன்கோவில்பட்டியை சேர்ந்தவருக்கு வயது 39. இவர், சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் சுமைதூக்கும் தொழிலாளியாக வேலை பார்த்தவர். கோயம்பேட்டில் கொரோனா பாதிப்பு அதிகரித்ததன் எதிரொலியாக சொந்த ஊருக்கு அவர் திரும்பி வந்தார். அப்போது அவருக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதியாகி உள்ளது.
மற்றொருவர் தேக்கம்பட்டியை சேர்ந்த லாரி டிரைவர். அவருக்கு வயது 36. அவரும் கோயம்பேடு மார்க்கெட்டுக்கு சென்று திரும்பி வந்தவர் ஆவார். 3-வதாக பாதிக்கப்பட்டவர் உத்தமபாளையத்தை சேர்ந்தவர். அவருக்கு வயது 42. இவர் தனது மனைவியுடன் காஞ்சிபுரத்தில் காய்கறி விற்பனை செய்து வந்தார். கடந்த வாரம் சொந்த ஊருக்கு திரும்பி வந்த நிலையில், அவருடைய மனைவிக்கு ஏற்கனவே கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இந்த நிலையில் தற்போது காய்கறி வியாபாரிக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
நோய் தொற்றால் பாதிக்கப்பட்ட 3 பேரும் சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் தேனி மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 59 ஆக அதிகரித்துள்ளது. இவர்களில் 16 பேர் தற்போது சிகிச்சையில் உள்ளனர்.
ஓடைப்பட்டியை சேர்ந்த லாரி டிரைவர் ஒருவர் ஏற்கனவே பாதிக்கப்பட்டு சிகிச்சையில் உள்ளார். இந்நிலையில் ஓடைப்பட்டியை சேர்ந்த 40-க்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா பாதிப்பு உள்ளதா? என்று கண்டறிய பரிசோதனை நடத்தப்பட்டது. அவர்களில் கொரோனா பாதிப்பு இருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் 2 பெண்கள் உள்பட 5 பேர் நேற்று தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். அங்கு அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
Related Tags :
Next Story