திண்டுக்கல்லில், ரவுடி கொலையில் அண்ணன்-தம்பி உள்பட 6 பேர் கைது
திண்டுக்கல்லில் பிரபல ரவுடி கொலை செய்யப்பட்ட வழக்கில் அண்ணன்- தம்பி உள்பட 6 பேரை போலீசார் கைது செய்தனர்.
குள்ளனம்பட்டி,
திண்டுக்கல் அருகே உள்ள பிள்ளையார்பாளையம் காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் கண்ணன். இவரது மகன் ரமேஷ் என்ற சுள்ளான் (வயது 25). பிரபல ரவுடியான இவர் கடந்த 8-ந் தேதி பாரதிபுரம் கருப்புசாமி கோவில் அருகே மர்மகும்பலால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இதுகுறித்து திண்டுக்கல் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
கொலை செய்த மர்மநபர் களை பிடிக்க போலீஸ் இன்ஸ்பெக்டர் தெய்வம் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர்கள் வேல்முருகன், அழகுபாண்டி, அருண் நாராயணன் ஆகியோர் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது. இந்த தனிப்படை போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணையை முடுக்கி விட்டனர்.
இந்தநிலையில் நேற்று முன்தினம் அடியனூத்து செங்குளம் பகுதியில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது காட்டு பகுதியில் பதுங்கியிருந்த சிலரை மடக்கி பிடித்து விசாரணை நடத்தினர். அதில் அவர்கள் பாரதிபுரத்தை சேர்ந்த சகோதரர்கள் டைசன் வினோ (31), ஜான்சன் வினோ (33) மற்றும் அதே பகுதியை சேர்ந்த செல்வராஜ் (31), மாயக்கண்ணன் (24), மேட்டுப்பட்டியை சேர்ந்த வினோத்குமார் (28), வேடபட்டியை சேர்ந்த அழகர் (40) என்பதும், ரமேஷ் கொலை வழக்கில் தொடர்புடையவர்கள் என்பதும் தெரியவந்தது.
இதனையடுத்து அவர்கள் 6 பேரையும், போலீசார் தாலுகா போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று துருவி துருவி விசாரணை செய்தனர். அப்போது அவர்கள் ரமேசை கொலை செய்ததை ஒப்புக்கொண்டனர். இதையடுத்து 6 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் இந்த வழக்கில் தொடர்புடைய மேட்டுப்பட்டியை சேர்ந்த வினோத் (25) என்பவரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
இதுகுறித்து கைதானவர்கள் வாக்குமூலம் அளித்து உள்ளனர். அவர்கள் அளித்த வாக்குமூலம் குறித்து போலீசார் கூறியதாவது:-
கைதான டைசன் வினோவின் மனைவிக்கும் ரமேசின் நண்பர் ஒருவருக்கும் தொடர்பு ஏற்பட்டது. பின்னர் அவருடன் டைசன் வினோவின் மனைவியும், 2 குழந்தைகளும் சென்று விட்டனர். இதற்கு ரமேஷ் மற்றும் அவருடைய நண்பர்கள் உடந்தையாக இருந்துள்ளனர். இதனால் ரமேசின் நண்பரை கடந்த சில நாட்களுக்கு முன்பு டைசன் வினோ கண்டித்தார். இதுகுறித்து ரமேசுக்கு தெரியவரவே டைசன் வினோவின் வீட்டுக்கு சென்று அவரை மிரட்டியுள்ளார். இதனால் ஏற்பட்ட பிரச்சினையில் ரமேசை தீர்த்து கட்ட டைசன்வினோ திட்டம் தீட்டினார். இதையடுத்து ரமேசை சமாதான பேச்சுவார்த்தை நடத்த வருமாறு டைசன்வினோ அழைத்துள்ளார். அதன்படி ரமேஷ், பாரதிபுரம் கருப்புசாமி கோவில் அருகே வந்தார். அப்போது அங்கு தயாராக இருந்த டைசன் வினோ, அவரது அண்ணன் ஜான்சன் வினோ மற்றும் நண்பர்கள் சேர்ந்து ரமேசை கொலை செய்தனர்.
இவ்வாறு போலீசார் தெரிவித்தனர்.
இதையடுத்து ரமேசை கொலை செய்ய பயன்படுத்திய 3 கத்திகளை போலீசார் பறிமுதல் செய்தனர். கொலை குற்றவாளிகளை விரைந்து கைது செய்த போலீசாரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்திவேல் பாராட்டினார்.
Related Tags :
Next Story