ஊரடங்கை மீறி கண்மாயில் மீன்பிடி திருவிழா


ஊரடங்கை மீறி கண்மாயில் மீன்பிடி திருவிழா
x
தினத்தந்தி 11 May 2020 1:14 PM IST (Updated: 11 May 2020 1:14 PM IST)
t-max-icont-min-icon

ஊரடங்கை மீறி கண்மாயில் மீன்பிடி திருவிழா நேற்று நடந்தது.

மேலூர், 

கொரோனா நோய் பரவலை தடுக்க ஊரடங்கு அமலில் உள்ளது. மக்கள் கூடும் வகையில் நிகழ்ச்சிகள் நடத்த தடை விதிக்கப்பட்டு இருக்கிறது. இந்த நிலையில் மதுரை மாவட்டம் மேலூர் அருகே கிராம மக்கள் திரண்டு தடையை மீறி மீன்பிடி திருவிழா நடத்தி உள்ளனர்.

அதாவது, மேலூர் அருகே உள்ள சென்னகரம்பட்டி-மேலவளவு ரோட்டில் உள்ளது, பெரிய கண்மாய். இந்த கண்மாயில் தற்போது தண்ணீர் வற்றிவிட்டது.

எனவே மீன்பிடி திருவிழா நடத்தப்பட்டுள்ளது. இதையொட்டி அப்பகுதியைச் சேர்ந்த பெண்கள், சிறுவர்கள், இளைஞர்கள் உள்பட ஏராளமானோர் திரண்டு நேற்று அந்த கண்மாய்க்கு வந்தனர். அவர்கள் வலைகளைக் கொண்டும், கைகளாலும் கண்மாயில் இறங்கி போட்டி போட்டு ரகம், ரகமான மீன்களை பிடித்தனர். குறிப்பாக இளைஞர்கள் அதிக அளவிலான மீன்களை அள்ளினர்.

கெண்டை, கெளுத்தி, கட்லா, விரால், கொரவை உள்ளிட்ட மீன்கள் அதிகமாக பிடிபட்டன. இதனால் அந்த பகுதி வீடுகளில் மீன் குழம்பு வாசனை கமகமத்தது.

அதே நேரம் ஊரடங்கை மீறி நடைபெற்ற இந்த மீன்பிடி திருவிழா குறித்து அரசு அதிகாரிகள் விசாரணையும் நடத்தி வருகின்றனர்.


Next Story