தென்னை மரங்களுக்கு பயிர் காப்பீடு செய்யலாம் - மாவட்ட நிர்வாகம் தகவல்
விருதுநகர் மாவட்டத்தில் தென்னை சாகுபடி செய்துள்ள விவசாயிகள் காப்பீடு செய்ய வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
விருதுநகர்,
விருதுநகர் மாவட்டத்தில் 10,050 ஹெக்டேர் நிலப்பரப்பில் தென்னை சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. கடந்த ஜனவரி மாதம் தென்னையில் வெள்ளை ஈக்கள் தாக்குதல் ஆங்காங்கே தென்பட்டதை தொடர்ந்து மாவட்டம் முழுவதும் இதனை கட்டுப்படுத்தும் முறைகள் குறித்து விவசாயிகளுக்கு கலந்துரையாடல்கள் மூலம் எடுத்துரைக்கப்பட்டது. கடந்த மார்ச் மாதம் வரை 10 சதவீதத்துக்கும் குறைவாகவே பாதிப்பு இருந்தது. தற்போது நிலவி வரும் கோடை கால வறட்சியால் தென்னையில் ஈ தாக்குதல் அதிகரித்துள்ளது.
இதனை கட்டுப்படுத்த உரிய முறைகளை கையாள விவசாயிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஊடு பயிராக தட்டப்பயிறு மற்றும் சூரியகாந்தி பயிர்களை சாகுபடி செய்ய வேண்டும். ஏக்கருக்கு 2 விளக்கு பொறி வைத்து வெள்ளை ஈ நடமாட்டத்தை கண்காணிக்கலாம். வெள்ளை ஈக்களை கவர்ந்து அழிக்க மஞ்சள் ஒட்டுப்பொறி ஏக்கருக்கு 20 எண்ணம் வீதம் 5 அடி உயரத்தில் அமைக்கலாம். பூந்தெளிப்பான் மூலம் தென்னை மட்டைகளில் கீழ் மட்டை ஓலைகளில் தண்ணீரை பீச்சி அடிக்கலாம். மேலும் வெள்ளை ஈக்கள் தாக்குதல் அடைந்த தென்னை சாகுபடி பரப்பு விவரங்களை விவசாயிகள், அதிகாரிகளிடம் தெரிவிக்கலாம்.
தேங்காய் விற்பனை தொடர்பாக உழவன் செயலியில் உழவர் இ.சந்தை சேவைகளை பதிவு செய்து கொண்டால் தேங்காய் விற்பனைக்கு வாய்ப்புகள் உள்ளது. மேலும் தற்போது வெளிமாவட்டம், வெளிமாநிலங்களுக்கு தேங்காய்களை கொண்டு செல்வதற்கு எந்த ஒரு தடையும் இல்லை. முழு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தற்போது தேங்காய்கள் உள்மாவட்ட தேவைக்கு மட்டும் உள்ளது என்றும், வாகன தடை ஏதும் இல்லை என்றும், தேங்காய் பேட்டை தலைவர் தகவல் தெரிவித்துள்ளார். தேங்காய்கள் தேக்கம் அடையாமல் இருப்பதற்கும், விற்பனை மேற்கொள்வதற்கும் அவ்வப்போது விவசாய விற்பனைத்துறை மூலம் கண்காணிக்கப்பட்டு வருகிறது. விவசாய விற்பனைத்துறையின் துணை இயக்குனர் அலுவலகத்தை அணுகி விற்பனைக்கு ஏற்பாடு செய்து கொள்ளலாம்.
பிரதமரின் பயிர் காப்பீடு திட்டத்தின் கீழ் தென்னை சாகுபடிக்கும் பயிர் காப்பீடு செய்ய வாய்ப்பு தரப்படுகிறது. குட்டை மற்றும் ஒட்டுரக தென்னை மரத்துக்கு ஒரு மாதத்திற்கான காப்பீடு தொகை ரூ.900 எனவும், நெட்டை மரத்துக்கு ரூ.1,750 எனவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக மேலும் விவரங்களை அறிய வட்டார விவசாய உதவி இயக்குனர் அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம். தென்னை சாகுபடி செய்யும் விவசாயிகள் மேற்கண்ட வழிமுறைகளை கையாண்டு பயன்பெறலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story