சென்னையில் இருந்து வந்தவர்கள்: தூத்துக்குடியில் புதிதாக 3 பேருக்கு கொரோனா தொற்று
சென்னையில் இருந்து தூத்துக்குடிக்கு வந்த 3 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் மேலும் 10 பேர் குணமடைந்து வீடு திரும்பினர்.
தூத்துக்குடி,
தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனா வைரசால் ஏற்கனவே 27 பேர் பாதிக்கப்பட்டு இருந்தனர். இதில் 26 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். ஒரு மூதாட்டி பரிதாபமாக இறந்தார். அதன் பிறகு 18 நாட்களாக புதிய தொற்று ஏற்படாமல் இருந்தது. அதன்பிறகு கடந்த 6-ந் தேதி சென்னையில் இருந்து தூத்துக்குடிக்கு வந்த 2 பேருக்கும், 7-ந் தேதி மேலும் ஒருவருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
இதனால் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 30 ஆக அதிகரித்தது. தொடர்ந்து அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களுக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. அதில் யாருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்படவில்லை.
மேலும் வெளிமாவட்டங்களில் இருந்து தூத்துக்குடிக்கு வருபவர்களை போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். மாவட்ட எல்லையில் பரிசோதனை நடத்தப்பட்டு, அறிகுறி உள்ளவர்கள் கோவில்பட்டி அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். அதன்படி, அனுமதிக்கப்பட்டவர்களின் சளி மாதிரிகள் சேகரித்து பரிசோதனை செய்யப்பட்டது.
இதில் கோவில்பட்டி, எட்டயபுரம், ஆழ்வார்திருநகரி ஆகிய பகுதிகளை சேர்ந்த 3 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இவர்கள் 3 பேரும் சென்னையில் இருந்து வந்தவர்கள் ஆவர். இதையடுத்து தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 33 ஆக உயர்ந்து உள்ளது.
தற்போது பாதிக்கப்பட்டவர்களில் எட்டயபுரம் பகுதியில் உள்ள இளம்புவனத்தைச் சேர்ந்த 23 வயதான வாலிபர் சென்னையில் உள்ள மளிகை கடையில் தொழிலாளியாக வேலை செய்து வருகிறார். இவர் கொரோனா ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், சென்னையில் இருந்து மோட்டார் சைக்கிளில் இளம்புவனத்துக்கு வந்தார். அவருக்கு சுகாதார துறையினர் நடத்திய பரிசோதனையில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து அவர் தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரி கொரோனா வார்டில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். மேலும் அவரது குடும்பத்தினர் 6 பேரையும் வீட்டிலேயே தனிமைப்படுத்தி உள்ளனர். தொடர்ந்து இளம்புவனம் பகுதியில் சுகாதார துறையினர் கிருமிநாசினி தெளித்தனர். அங்கு வெளியூர்களில் இருந்து யாரும் நுழையாத வகையில், போலீசார் தடுப்புகள் அமைத்து கண்காணித்து வருகின்றனர்.
10 பேர் குணமடைந்தனர்
நெல்லை, தென்காசி, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களை சேர்ந்த கொரோனா நோயாளிகள், நெல்லை அரசு ஆஸ்பத்திரி கொரோனா வார்டில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். இங்கு நெல்லை மாவட்டத்தை சேர்ந்த 90 பேர் சிகிச்சை பெற்றனர். அதில் ஒரு முதியவர் பலியானார்கள். 62 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பினார்கள். மீதமுள்ள 27 பேரும் தொடர்ந்து தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்கள். நெல்லை மாவட்டத்தில் நேற்று புதிதாக யாருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்படவில்லை.
தென்காசி மாவட்டத்தை பொறுத்த வரை கடந்த 2 நாட்களாக கொரோனா தொற்று பாதிப்பு இல்லாமல் உள்ளது. அங்கு 52 பேர் ஏற்கனவே கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். அவர்களில் 26 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பி விட்டனர். இந்த நிலையில் நேற்று நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்ற புளியங்குடியை சேர்ந்த 4 பெண்கள் உள்பட 10 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். அவர்கள் அனைவரும் 14 நாட்கள் தங்களது வீடுகளில் தனிமையில் இருக்க ஆலோசனை வழங்கப்பட்டு உள்ளது. இதையடுத்து தென்காசி மாவட்டத்தில் 16 பேர் மட்டுமே நெல்லை, தென்காசி அரசு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். அவர்கள் அனைவரும் ஆரோக்கியமான நிலையில் சிகிச்சை பெற்று வருவதால் அடுத்தடுத்து டிஸ்சார்ஜ் செய்யப்படுவார்கள் என்று டாக்டர்கள் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story