தூத்துக்குடியில் 47 நாட்களுக்கு பிறகு டீக்கடைகள் திறப்பு


தூத்துக்குடியில் 47 நாட்களுக்கு பிறகு டீக்கடைகள் திறப்பு
x
தினத்தந்தி 12 May 2020 4:00 AM IST (Updated: 12 May 2020 12:36 AM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடி மாவட்டத்தில் 47 நாட்களுக்கு பிறகு டீக்கடைகள் நேற்று திறக்கப்பட்டன.

தூத்துக்குடி, 

தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கில் இருந்து பல்வேறு தொழில்கள், கடைகள் செயல்பட விலக்கு அளிக்கப்பட்டு உள்ளது. அதன்படி டீக்கடைகள் திறக்கப்பட்டு, பார்சல்கள் மட்டும் வழங்கலாம் என்று அரசு அறிவித்து உள்ளது.

பொதுவாக எப்போதும் கூட்டம் நிரம்பி இருக்கும் இடங்களில் டீக்கடை ஒன்றாகும். பலரும் நண்பர்களோடு பல கதைகளை பேசியபடி, டீயும், வடையும் சாப்பிடுவதை வழக்கமாக கொண்டு உள்ளனர். இதனால் டீக்கடை திறப்பு என்ற அறிவிப்பு, டீக்கடை நடத்துபவர்களை போன்று, டீ விரும்பிகளுக்கும் அதிக மகிழ்ச்சியை தந்து உள்ளது.

இதனால் 47 நாட்களுக்கு பிறகு நேற்று காலை முதல் தூத்துக்குடி மாவட்டத்தில் டீக்கடைகள் திறக்கப்பட்டன. இந்த கடைகளில் பலர் டீ பார்சல் வாங்கி சென்று குடித்து மகிழ்ந்தனர்.

இதேபோன்று பூக்கடைகள், பழக்கடைகள், சாலையோர கடைகள் உள்ளிட்ட அனைத்து விதமான கடைகளும் திறந்து இருப்பதாலும், தச்சு வேலை உள்ளிட்ட பல்வேறு தொழில்கள் மும்முரமாக நடந்து வருவதாலும் மக்கள் நடமாட்டம் இயல்பு நிலைக்கு மாறி உள்ளது.

அதே நேரத்தில் பொதுமக்கள் முககவசம் அணியாமல் வெளியில் சுற்றுவதை தவிர்க்க வேண்டும், சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்று அதிகாரிகளும் தொடர்ந்து அறிவுறுத்தியபடி உள்ளனர். ஹெல்மெட் வழக்கு போன்று முககவசம் அபராதமும் அதிகரிக்க தொடங்கி உள்ளது.

Next Story