ஆழ்வார்திருநகரி அருகே, கொரோனா கட்டுப்பாட்டு பகுதியில் கலெக்டர் ஆய்வு
ஆழ்வார்திருநகரி அருகே கொரோனா கட்டுப்பாட்டு பகுதியில் கலெக்டர் சந்தீப் நந்தூரி ஆய்வு மேற்கொண்டார்.
தென்திருப்பேரை,
தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட 27 பேரில், 26 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். ஒரு மூதாட்டி உயிரிழந்தார். இந்த நிலையில் ஆழ்வார்திருநகரி அருகே மழவராயநத்தத்தைச் சேர்ந்த லாரி டிரைவர், ஸ்ரீவைகுண்டம் அருகே சேரகுளத்தைச் சேர்ந்த ஆண் ஒருவர், எப்போதும்வென்றான் அருகே ஆதனூரைச் சேர்ந்த பெண் ஒருவர் என மேலும் 3 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது.
இதையடுத்து சுகாதார துறையினர் மேற்கண்ட கொரோனா கட்டுப்பாட்டு பகுதிகளில் கிருமிநாசினி தெளிக்கும் பணிகளில் மும்முரமாக ஈடுபட்டு உள்ளனர். அந்த இடங்களில் வெளிநபர்கள் யாரும் நுழையாத வகையில், போலீசார் தடுப்புகள் அமைத்து தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.
இந்த நிலையில் ஆழ்வார்திருநகரி அருகே மழவராயநத்தம் கொரோனா கட்டுப்பாட்டு பகுதியில் மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி நேற்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது அவர், அங்கு தனிமைப்படுத்தப்பட்ட வீடுகளில் வசிக்கும் நபர்களிடம், வீடுகளில் இருந்து வெளியே வரக்கூடாது, சோப்பு மூலம் அடிக்கடி கைகளை நன்கு கழுவ வேண்டும் என்று அறிவுறுத்தினார்.
பின்னர் கலெக்டர் சந்தீப் நந்தூரி நிருபர் களிடம் கூறியதாவது:-
ஒத்துழைப்பு
கொரோனா கட்டுப்பாட்டு பகுதியில் தனிமைப்படுத்தப்பட்ட நபர்களின் வீடுகளுக்கு இலவச ரேஷன் பொருட்களை தன்னார்வலர்கள் மூலம் வழங்கி வருகிறோம். தனிமைப்படுத்தப்பட்ட நபர்கள் எக்காரணம் கொண்டும் வெளியில் நடமாடக் கூடாது. இதுகுறித்து தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம்.
வெளி மாவட்டங்கள், வெளி மாநிலங்களில் இருந்து அனுமதியின்றி வரும் நபர்களை கண்டறிய மாவட்ட எல்லைகளில் சோதனைச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. கொரோனா வைரசை முற்றிலும் ஒழிப்பதற்கு அரசின் வழிகாட்டு முறைகளை பொதுமக்கள் கடைபிடித்து முழுமையாக ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
ஊரக வேலைவாய்ப்பு
பின்னர் அவர், ஆதிநாதபுரம் பஞ்சாயத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் தொழிலாளர்கள் பணியாற்றியதை பார்வையிட்டு, வருகை பட்டியல், பதிவேடுகளை ஆய்வு செய்தார். அப்போது அவர், தொழிலாளர்கள் சமூக இடைவெளியை கடைபிடித்து பணியாற்ற வேண்டும். தினமும் முக கவசங்களை புதிதாக அணிய வேண்டும் என்று அறிவுறுத்தினார்.
திருச்செந்தூர் உதவி கலெக்டர் தனப்பிரியா, ஏரல் தாசில்தார் அற்புதமணி, சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் முத்துராமன், ஆழ்வார்திருநகரி யூனியன் ஆணையாளர்கள் பாக்கிய லீலா, கருப்பசாமி மற்றும் பலர் உடன் இருந்தனர்.
Related Tags :
Next Story