கார் டிரைவர்களுக்கு நிவாரண உதவி வழங்க வேண்டும்: சங்க நிர்வாகிகள் கலெக்டரிடம் கோரிக்கை


கார் டிரைவர்களுக்கு நிவாரண உதவி வழங்க வேண்டும்: சங்க நிர்வாகிகள் கலெக்டரிடம் கோரிக்கை
x
தினத்தந்தி 12 May 2020 4:30 AM IST (Updated: 12 May 2020 2:47 AM IST)
t-max-icont-min-icon

கார் டிரைவர்களுக்கு நிவாரண உதவி வழங்க வேண்டும்: சங்க நிர்வாகிகள் கலெக்டரிடம் கோரிக்கை

நெல்லை, 

கொரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்ட கார் டிரைவர்களுக்கு நிவாரண உதவி வழங்க வேண்டும் என கலெக்டர் ஷில்பாவிடம், சங்க நிர்வாகிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அனைத்திந்திய வாகன ஓட்டுநர்கள் பேரவையின் நெல்லை மாவட்ட தலைவர் முருகதாஸ் தலைமையிலும், நெல்லை மாவட்ட சுற்றுலா வாகன ஓட்டுனர்கள், உரிமையாளர்கள் மற்றும் நெல்லை மாநகர இனோவா ஓட்டுநர் நலச்சங்க தலைவர் ரீகன் தலைமையிலும், உரிமை குரல் ஓட்டுனர் தொழிற்சங்க மாவட்ட பொருளாளர் ஆறுமுகம் தலைமையிலும் நெல்லை மாவட்ட கலெக்டர் ஷில்பாவிடம் தனித்தனியாக கோரிக்கை மனுக்கள் கொடுக்கப்பட்டன.

அந்த மனுக்களில் கூறி இருப்பதாவது:-

தமிழகம் முழுவதும் சுமார் 15 லட்சத்துக்கும் மேற்பட்ட ஓட்டுனர்கள் உள்ளனர். நெல்லை மாவட்டத்தில் மட்டும் சுமார் 35 ஆயிரம் பேர் இருக்கிறார்கள். இதில் ஆட்டோ ரிக்‌ஷா ஓட்டுனர்கள் மட்டுமே நல வாரியத்தில் பதிவு செய்தும், அதன் பலன்களை அனுபவித்தும் வருகிறார்கள். வாடகை கார், வேன் ஓட்டுனர்களுக்கு அரசிடம் இருந்தோ, பிற அமைப்புகளிடம் இருந்தோ எந்தவொரு நலத்திட்ட உதவிகளும் கிடைக்கவில்லை.

மத்திய, மாநில அரசுகள் அறிவித்த பொது ஊரடங்கு அறிவிப்பால் கடந்த 47 நாட்களாக வாடகை வாகனங்கள் இயக்கவில்லை. இதனால் எங்கள் தொழில் பாதிக்கப்பட்டுள்ளது. கார், வேன் ஓட்டுனர்களின் குடும்பங்கள் வறுமையில் உள்ளன.

வாகனங்கள் இயங்கும் போது சாலை வரி, இன்சூரன்ஸ், கடன் தவணை, வாகன பராமரிப்பு இதுபோன்ற செலவுகளால் சிரமப்பட்டு கொண்டு இருந்தோம். இந்த நிலையில் இயங்காத வாகனத்துக்கு சாலை வரி, இன்சூரன்ஸ், கடன் தவணை, அதற்கு அபராத வட்டி, வாகன பராமரிப்பை எப்படி சமாளிக்க முடியும்.

கொரோனா வைரஸ் பேரிடராக அறிவிக்கப்பட்டு உள்ளது. கார் மற்றும் வேன் டிரைவர்களுக்கு உரிய நிவாரண உதவி கிடைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். இயங்காத வாகனங்களுக்கு சாலை வரியில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும். கொரோனா வைரசால் பொருளாதார பின்னடைவு ஏற்பட்டு உள்ளது. இதனால் தமிழகத்தில் உள்ள அனைத்து சுங்கச்சாவடிகளையும் குறைந்த பட்சம் 3 மாதங்கள் மூட வேண்டும். ஏற்கனவே காலாவதியான வாகனங்களின் தகுதி சான்று, பர்மிட், பேட்ஜ், லைசன்ஸ், இன்சூரன்ஸ் ஆகியவற்றை புதுப்பித்து கொள்ள வருகிற செப்டம்பர் 30-ந் தேதி வரை கால அவகாசம் வழங்க வேண்டும்.

இவ்வாறு அந்த மனுக்களில் கூறப்பட்டு உள்ளது.

Next Story