கூடுவாஞ்சேரி பகுதியில் காய்கறி வியாபாரிகள் 23 பேருக்கு கொரோனா உறுதி
கூடுவாஞ்சேரி பகுதியில் ஒரேநாளில் காய்கறி வியாபாரிகள் 23 பேருக்கு கொரோனா உறுதியானது.
வண்டலூர்,
சென்னையை அடுத்த ஆலந்தூர் மண்டலத்திற்குட்பட்ட ஆலந்தூர், ஆதம்பாக்கம், பழவந்தாங்கல், மீனம்பாக்கம் போன்ற பகுதிகளில் இருந்து 14 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். பெருங்குடி மண்டலத்திற்குட்பட்ட மடிப்பாக்கத்தில் பொதுப்பணி துறை ஊழியர் குடும்பத்தில் 5 பேருக்கும், பிற பகுதிகளில் 9 பேருக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டது.
அடையாறு மண்டலத்திற்குட்பட்ட கிண்டி மடுவின்கரை பகுதியில் காய்கறி கடை நடத்திய வியாபாரி அவரது குடும்பத்தினர் 5 பேர் என கொரோனா தொற்று ஏற்பட்டது. கொரோனா தொற்று ஏற்பட்ட அனைவரும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.
பல்லாவரம்
பல்லாவரம் நகராட்சியில் நேற்று 7 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. இதில் 6 பேர் காய்கறி வியாபாரிகள் ஆவர். இவர்கள், பல்லாவரத்தில் உள்ள திருமண மண்டபத்தில் தங்கவைக்கப்பட்டு இருந்தனர். அவர்களுக்கு நடத்திய பரிசோதனையில் இவர்களுடன் சேர்த்து இதுவரை 8 பேருக்கு கொரோனா உறுதியாகி உள்ளது.
பல்லாவரம் கண்டோன்மெண்ட் பகுதியில் கவுன்சிலர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியானது.
கூடுவாஞ்சேரி
செங்கல்பட்டு மாவட்டம் நந்திவரம் ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு உட்பட்ட பகுதியில் 2 பெண்கள் உள்பட காய்கறி வியாபாரிகள் 23 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியானது. இவர்கள் அனைவரும் தினமும் கோயம்பேடு மார்க்கெட்டுக்கு சென்று காய்கறி வாங்கி வந்து அந்தந்த பகுதியில் விற்பனை செய்து வந்தனர். கடந்த சில தினங்களுக்கு முன்பு இவர்கள் அனைவருக்கும் கொரோனா வைரஸ் பரிசோதனை செய்யப்பட்டது. பரிசோதனை முடிவு நேற்று வெளியானதில் இவர்கள் 23 பேருக்கும் கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து கூடுவாஞ்சேரி, மறைமலைநகர், நந்திவரம், கூடுவாஞ்சேரி, பேரமனூர், ஆலப்பாக்கம், ஊரப்பாக்கம், மண்ணிவாக்கம், ஊனமாஞ்சேரி, காட்டாங்கொளத்தூர் உள்ளிட்ட இவர்கள் வசித்து வந்த அனைத்து பகுதிகளில் உள்ள சாலைகளை மூடும் பணியில் அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
அச்சரப்பாக்கம்
அச்சரப்பாக்கம் ஒன்றியத்தில் நேற்று வெளியம்பாக்கம், மொரப்பாக்கம் கிராமங்களில் தலா ஒருவருக்கும், கூடலூர் கிராமத்தில் மேலும் 3 பேருக்கும் என 5 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. சித்தாமூர் ஊராட்சி ஒன்றியத்தில் நேற்று கொளத்தூர் கிராமத்தில் 2 பேருக்கும், மணப்பாக்கம், காவனூர் கிராமங்களில் தலா ஒருவருக்கும் என 4 பேருக்கு கொரோனா உறுதியானது. 9 பேரும் செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர்.
இவர்களுடன் சேர்த்து செங்கல்பட்டு மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 90 பேர் கொரேனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். மாவட்டம் முழுவதும் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 356 ஆனது. இவர்களில் 65 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினர். 4 பேர் உயிரிழந்து உள்ளனர். மற்றவர்கள் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
Related Tags :
Next Story