சென்னையில் ஒரே நாளில் கொரோனாவுக்கு 2 பேர் சாவு
சென்னையில் ஒரே நாளில் கொரோனாவுக்கு 2 பேர் உயிரிழந்தனர்.
திரு.வி.க.நகர்,
தமிழகத்தில் கொரோனா வைரசின் தாக்கம் அதிகரித்து கொண்டே இருக்கிறது. மேலும், நாளுக்கு நாள் இந்த கொலைகார வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 8 ஆயிரமாக உயர்ந்துள்ளது. மேலும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 53 ஆக அதிகரித்துள்ளது.
இந்த நிலையில் சென்னை புளியந்தோப்பு ராமசாமி தெருவைச் சேர்ந்த 68 வயது முதியவர், நேற்று முன்தினம் இரவு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டு வீட்டில் மயங்கி விழுந்தார். உடனடியாக முதியவரை மீட்டு அவருடைய மகன், கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்கு கொண்டு சென்றார். அங்கு முதியவரை பரிசோதித்த டாக்டர்கள் வரும் வழியிலேயே அவர் இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
முதியவர், மூதாட்டி சாவு
மேலும் அவரது ரத்த மாதிரி பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அதில் மாரடைப்பால் உயிரிழந்த முதியவருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது தெரியவந்தது.
இதேபோல் சென்னை ராயபுரத்தை சேர்ந்த 66 வயது மூதாட்டி, கடந்த சில தினங்களுக்கு முன்பு கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மதுரவாயல் அடுத்த வானகரத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி நேற்று பரிதாபமாக இறந்தார். அவர் இருதயம் சம்பந்தமான சிகிச்சை எடுத்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story