ஊரடங்கு கட்டுப்பாடுகள் மேலும் தளர்வு: தஞ்சையில் பெரும்பாலான கடைகள் திறப்பு இயல்பு நிலை திரும்பியது
ஊரடங்கு கட்டுப்பாடுகள் மேலும் தளர்வு செய்யப்பட்டதையொட்டி தஞ்சையில் பெரும்பாலான கடைகள் நேற்று திறக்கப்பட்டன.
தஞ்சாவூர்,
ஊரடங்கு கட்டுப்பாடுகள் மேலும் தளர்வு செய்யப்பட்டதையொட்டி தஞ்சையில் பெரும்பாலான கடைகள் நேற்று திறக்கப்பட்டன. இதனால் சாலைகளில் வாகனங்கள் அதிகரிப்பால் ஆங்காங்கே போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதை-யொட்டி தஞ்சை மாவட்டம் இயல்பு நிலைக்கு திரும்பியது.
ஊரடங்கு உத்தரவு
கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க நாடு முழுவதும் கடந்த மார்ச் மாதம் 25-ந் தேதி ஊரடங்கு உத்தரவு பிறப்பித்தது. இந்த உத்தரவு வருகிற 17-ந்தேதி வரை அமலில் உள்ளது. இதன் காரணமாக மக்கள் அத்தியாவசிய தேவைக்காக மட்டுமே வீடுகளை விட்டு வெளியே வர வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டனர்.
ஊரடங்கு காரணமாக சுற்றுலா தலங்கள், கோவில்களும் மூடப்பட்டன. அத்தியாவசிய பொருட்களான காய்கறி, மளிகை, மருந்து கடைகள் மற்றும் இறைச்சி கடைகள் மட்டும் திறக்க அனுமதிக்கப்பட்டன. அதுவும் காலை 6 மணி முதல் மதியம் 12 மணி வரை திறக்கப்பட்டு, பின்னர் அது 1 மணி வரையும் நீட்டிக்கப்பட்டது. அதையும் மீறி வெளியே வந்தவர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவுசெய்தனர்.
பெரும்பாலான கடைகள் திறப்பு
ஊரடங்கு காலத்தில் அவ்வப்போது சில தளர்வுகளும் அறிவிக்கப்பட்டு வந்தன. இந்த நிலையில் கடந்த 4-ந்தேதி முதல் ஊரடங்கில் கட்டுப்பாடுகள் மேலும் தளர்வு செய்யப்பட்டன. நேற்று முதல் 34 வகையான கடைகளை திறக்கவும் அரசு அனுமதித்தது. கடைகள் காலை 10 மணி முதல் இரவு 7 மணி வரையும் திறக்க அனுமதிக்கப்பட்டன.
அதன்படி நேற்று தஞ்சை மாநகர் மற்றும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் பெரும்பாலான கடைகள் திறக்கப்பட்டன. நகைக் கடைகள், துணிக்கடைகள், ஷாப்பிங் மால் மற்றும் குளிர்சாதன வசதிகளை கொண்ட கடைகளை தவிர பெரும்பாலான கடைகள் திறக்கப்பட்டன. இதனால் பொருட்கள் வாங்குவதற்காக மக்கள் கடைவீதிகளில் குவிந்தனர். செல்போன் கடைகள் திறக்கலாம் என்று அறிவிக்கப்பட்ட போதிலும் தஞ்சையில் நேற்று திறக்கப்படவில்லை.
போக்குவரத்து நெரிசல்
சாலைகளில் மக்கள் நடமாட்டம் வழக்கம்போல காணப்பட்டது. இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களின் பயன்பாடும் அதிக அளவில் காணப்பட்டது. சாதாரண நாட்களில் மக்கள் நடமாட்டம் போல நேற்று காணப்பட்டது. ஊரடங்கு அறிவிக்கப்பட்ட 47 நாட்களுக்குப்பிறகு தஞ்சை நேற்று இயல்புநிலைக்கு திரும்பியது.
தஞ்சை கீழவாசல், தெற்கு வீதி, காந்திஜிசாலை, மருத்துவக்கல்லூரி சாலைகளிலும் பெரும்பாலான கடைகள் திறக்கப்பட்டு இருந்தன. மக்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டால் கீழராஜவீதி, தெற்கு வீதி உள்ளிட்ட இடங்களில் அவ்வப்போது போக்குவரத்து நெரிசலும் காணப்பட்டது. இதேபோல் மாவட்டம் முழுவதும் கடைகள் திறக்கப்பட்டு மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பினர். இருப்பினும் போலீசார் ஆங்காங்கே தடுப்புகள் அமைத்தும் கண்காணித்தனர். வாகனங்களில் சென்றவர்களை அழைத்து எச்சரித்து அனுப்பினர்.
Related Tags :
Next Story