கொரோனா பிரச்சினை முடிந்ததும் அரசியல் எதிர்காலம் குறித்து முடிவு செய்வேன் - ஏக்நாத் கட்சே சொல்கிறார்
பாரதீய ஜனதா சார்பில் எம்.எல்.சி. தேர்தலில் போட்டியிட ‘சீட்’ கொடுக்காததால் அதிருப்தி அடைந்துள்ள அக்கட்சியின் மூத்த தலைவர் ஏக்நாத் கட்சே, கொரோனா பிரச்சினை முடிந்ததும் தனது அரசியல் எதிர்காலம் குறித்து முடிவு செய்வேன் என்று கூறினார்.
மும்பை,
வட மராட்டியத்தில் பாரதீய ஜனதாவின் சக்தி வாய்ந்த தலைவராக திகழ்ந்தவர் ஏக்நாத் கட்சே. முந்தைய பாரதீய ஜனதா கூட்டணி அரசில் அப்போதைய முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிசுக்கு அடுத்த இடத்தில் இருந்தவர். 2016-ம் ஆண்டு ஊழல் குற்றச்சாட்டில் சிக்கி மந்திரி பதவியை இழந்த ஏக்நாத் கட்சே அதன் பின்னர் கட்சியில் இருந்து ஓரங்கட்டப்பட்டார். கடந்த ஆண்டு நடந்த மாநில சட்டசபை தேர்தலில் போட்டியிடுவதற்கும் அவருக்கு பாரதீய ஜனதா வாய்ப்பு மறுத்து விட்டது.
இதனால் கட்சி தலைமை மீது ஏக்நாத் கட்சே கடும் விரக்தி அடைந்தார். தான் கட்சியில் இருந்து ஓரங்கட்டப்பட்டதற்கு தேவேந்திர பட்னாவிஸ் தான் காரணம் என அவரை கடுமையாக சாடி வந்தார்.
இந்தநிலையில், வருகிற 21-ந் தேதி நடைபெற உள்ள எம்.எல்.சி. தேர்தலில் போட்டியிட விரும்புவதாக கூறினார்.
அநீதி
ஆனால் கட்சி தலைமை எம்.எல்.சி. தேர்தலிலும் ‘சீட்’ கொடுக்க மறுத்து விட்டது. இதனால் ஏக்நாத் கட்சே கட்சி மீது கடும் அதிருப்தி அடைந்துள்ளார். இதுதொடர்பாக அவர் கூறியதாவது:-
நான் எம்.எல்.சி. டிக்கெட் பெறுவதில் ஆர்வமாக இருந்தேன். மாநில செயற்குழுவும் அதற்கு ஆதரவாக இருந்தது. இருப்பினும் கட்சி அதை ஏற்கவில்லை. பாரதீய ஜனதாவுக்கு எதிராக பணியாற்றியவர்களுக்கு ‘சீட்’ வழங்கப்பட்டுள்ளது.
கட்சி எனது வேண்டுகோளை நிராகரித்ததால் எனக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளது. தற்போதைய கொரோனா நிலைமைக்கு மத்தியில் எனது எதிர்கால அரசியல் போக்கு பற்றி எந்த முடிவும் எடுப்பது நல்லதல்ல. அதன்பிறகு முடிவு செய்வேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story