தாராசுரம் காய்கறி மார்க்கெட் வேறு இடத்திற்கு மாற்றம் பொதுமக்கள் கடும் அவதி


தாராசுரம் காய்கறி மார்க்கெட் வேறு இடத்திற்கு மாற்றம் பொதுமக்கள் கடும் அவதி
x
தினத்தந்தி 12 May 2020 4:54 AM IST (Updated: 12 May 2020 4:54 AM IST)
t-max-icont-min-icon

தாராசுரம் காய்கறி மார்க்கெட் வேறு இடத்திற்கு மாற்றப்பட்டதால் பொதுமக்கள் கடும் அவதி அடைந்து உள்ளனர்.

கும்பகோணம், 

தாராசுரம் காய்கறி மார்க்கெட் வேறு இடத்திற்கு மாற்றப்பட்டதால் பொதுமக்கள் கடும் அவதி அடைந்து உள்ளனர்.

லாரி டிரைவருக்கு கொரோனா

தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தை அடுத்துள்ள தாராசுரத்தில் காய்கறி மார்க்கெட் அமைந்து உள்ளது. கும்பகோணம் நகராட்சியின் நிர்வாகத்தின் கீழ் இந்த மார்க்கெட் செயல்பட்டு வருகிறது. இங்குள்ள ஒரு வியாபாரிக்கு உத்தரபிரதேச மாநிலத்தில் இருந்து உருளைக்கிழங்கு லாரி மூலம் கொண்டு வரப்பட்டது.

இதையடுத்து லாரியை ஓட்டி வந்த டிரைவர் உள்பட 3 பேரை கடந்த 8-ந் தேதி நீலத்தநல்லூர் சோதனை சாவடியில் உள்ள சுகாதார குழுவினர் கொரோனா தொற்று உள்ளதா? என ஆய்வு செய்தனர். இதில் லாரி டிரைவருக்கு கொரோனா நோய் தொற்று இருப்பது நேற்று முன்தினம் இரவு உறுதி செய்யப்பட்டது.

காய்கறி மார்க்கெட் மாற்றம்

இதனால் தாராசுரம் காய்கறி மார்க்கெட்டில் வேலைபார்த்து வந்தவர்கள், காய்கறி வாங்க வந்த சில்லறை விற்பனையாளர்கள் என 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து காய்கறி மார்க்கெட் அன்று இரவோடு இரவாக மூடப்பட்டு கும்பகோணத்தை அடுத்த அம்மாப்பேட்டை பைபாஸ் சாலையில் உள்ள மைதானத்திற்கு நேற்று காலை மாற்றப்பட்டது.

நேற்று காலை முதல் அந்த இடத்தில் மார்க்கெட் இயங்கி வருகிறது. தாராசுரத்தில் இருந்த காய்கறி மார்க்கெட் அம்மாப்பேட்டை பைபாஸ் சாலைக்கு மாற்றப்பட்டு உள்ளதால் பொதுமக்கள் கடும் அவதி அடைந்து உள்ளனர்.

நூற்றுக்கணக்கானோர் தொடர்பு

இந்த நிலையில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர் கடந்த 3 நாட்களாக தாராசுரம் காய்கறி மார்க்கெட்டில் இருந்ததாகவும், அவருடன் தொடர்பில் நூற்றுக்கணக்கானோர் இருந்ததாவும் கூறப்படுகிறது.

இதனால் தாராசுரம் காய்கறி மார்க்கெட்டுக்கு வந்து சென்றவர்கள், பல்வேறு கடை ஊழியர்கள் உள்ளிட்ட பலருக்கு கொரோனா பாதிப்பு பரவக்கூடும் என்பதால் உடனடியாக நேற்று காலை கொரோனா தொற்று ஆய்வு சிறப்பு முகாம் கும்பகோணம் காய்கறி மார்க்கெட் எதிரே அமைக்கப்பட்டது.

தனிமைப்படுத்தப்பட்டனர்

கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட டிரைவருடன் பணியாற்றிய, பழகிய நபர்கள் சுமார் 75-க்கும் மேற்பட்டவர்களுக்கு ரத்த, சளி மாதிரிகள் எடுக்கப்பட்டு ஆய்வுக்கு அனுப்பப்பட்டது. ஆய்வு செய்யப்பட்ட அனைவரும் கொரோனா தொற்று பரவாவமல் இருக்க தஞ்சை அருகே உள்ள ஒரு தனியார் கல்லூரிக்கு அழைத்து செல்லப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். கும்பகோணத்தில் தினந்தோறும் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் வேலைபார்த்து வந்த மார்க்கெட் வாகன டிரைவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் கும்பகோணம் மக்கள் கவலையில் உள்ளனர்.

Next Story