எம்.எல்.சி. தேர்தல்: முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே வேட்பு மனு


எம்.எல்.சி. தேர்தல்: முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே வேட்பு மனு
x
தினத்தந்தி 12 May 2020 5:00 AM IST (Updated: 12 May 2020 5:00 AM IST)
t-max-icont-min-icon

மராட்டிய எம்.எல்.சி. தேர்தலில் போட்டியிட முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே வேட்பு மனு தாக்கல் செய்தார்.

மும்பை, 

மராட்டியத்தில் 9 எம்.எல்.சி.களின் பதவிக்காலம் கடந்த 24-ந் தேதியுடன் முடிவடைந்தது. கொரோனா பிரச்சினையால் தள்ளிவைக்கப்பட்ட இந்த தேர்தல் வருகிற 21-ந் தேதி நடக்கிறது. எம்.எல்.ஏ. அல்லது எம்.எல்.சி.யாக இல்லாத முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே, தனது பதவியை தக்க வைத்து கொள்வதற்கான தேர்தல் இதுவென்பதால் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

எனவே ஆளும் சிவசேனா சார்பில் வேட்பாளர்களாக முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே, தற்போதைய மேல்-சபை துணை தலைவர் நீலம்கோரே ஆகியோர் அறிவிக்கப்பட்டனர். எதிர்க்கட்சியான பாரதீய ஜனதா 4 வேட்பாளர்களை அறிவித்து உள்ளது. சிவசேனாவின் கூட்டணி கட்சிகளான தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் கட்சிகள் தலா 2 வேட்பாளர்களை அறிவித்தது. பின்னர் காங்கிரஸ் சார்பில் ஒருவர் மட்டுமே வேட்பு மனு தாக்கல் செய்வார் என்று மாநில காங்கிரஸ் தலைவர் பாலசாகேப் தோரட் நேற்று முன்தினம் இரவு அறிவித்தார்.

இந்தநிலையில் முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே நேற்று எம்.எல்.சி. தேர்தலில் போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்தார். அவருடன் மனைவி ராஷ்மி தாக்கரே, மந்திரி ஆத்திய தாக்கரே, சஞ்சய் ராவத் எம்.பி. ஆகியோர் உடன் இருந்தனர். இதேபோல நீலம் கோரேயும் சிவசேனா சார்பில் வேட்பு மனுதாக்கல் செய்தார். இதுதவிர சிவசேனாவின் கூட்டணி கட்சிகளான தேசியவாத காங்கிரஸ் சார்பில் சசிகாந்த் ஷிண்டே, அமோல் மித்காரியும், காங்கிரஸ் சார்பில் ராஜேஸ் ரதோடும் வேட்மனு தாக்கல் செய்தனர்.

பா.ஜனதா வேட்பாளர்கள் 4 பேர் கடந்த வெள்ளிக்கிழமையே வேட்பு மனுதாக்கல் செய்துவிட்டனர். 9 எம்.எல்.சி.களுக்கான தேர்தலில் 9 வேட்பாளர்கள் மட்டுமே வேட்பு மனு தாக்கல் செய்துள்ளதால் முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே உள்பட அனைவரும் போட்டியின்றி தேர்வாக உள்ளனர். வேட்பு மனு தாக்கல் நேற்றுடன் முடிந்தது. மனுக்கள் மீது இன்று (செவ்வாய்க்கிழமை) பரிசீலனை நடக்க உள்ளது.

Next Story