வெளிமாநிலங்களில் சிக்கித்தவிக்கும் கன்னடர்களை அழைத்துவர சிறப்பு ரெயில்களை இயக்க வேண்டும் - ரெயில்வே அதிகாரியிடம் டி.கே.சிவக்குமார் கடிதம்
வெளிமாநிலங்களில் சிக்கித்தவிக்கும் கன்னடர்களை அழைத்துவர சிறப்பு ரெயில்களை இயக்க வேண்டும் என்று கோரி ரெயில்வே அதிகாரியிடம் டி.கே.சிவக் குமார் கடிதம் வழங்கியுள்ளார்.
பெங்களூரு,
தென்மேற்கு ரெயில்வே அதிகாரி அசோக் வர்மாவை பெங்களூருவில் நேற்று கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் நேரில் சந்தித்து பேசினார். அப்போது, வெளிமாநிலங்களில் சிக்கித்தவிக்கும் கன்னடர்களை சிறப்பு ரெயில்கள் மூலம் அழைத்து வருமாறும், அதற்குரிய கட்டணத்தை காங்கிரஸ் ஏற்க தயாராக இருப்பதாகவும் தெரிவித்து கடிதம் ஒன்றை வழங்கினார்.
இந்த சந்திப்பின்போது, காங்கிரஸ் செயல் தலைவர் சலீம் அகமது உள்பட நிர்வாகிகள் உடன் இருந்தனர். இந்த சந்திப்புக்கு பிறகு டி.கே.சிவக்குமார் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
“கொரோனாவால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை சரிசெய்யவும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவவும் கேரளா அரசு ரூ.20 ஆயிரம் கோடிக்கு திட்டத்தை அறிவித்தது. கொரோனா பாதிப்பு குறித்து சட்டசபை சிறப்பு கூட்டத்தை கூட்டுமாறு கூறினேன். ரூ.50 ஆயிரம் கோடிக்கு சிறப்பு உதவி திட்டத்தை அறிவிக்குமாறு எதிர்க்கட்சிகள் அரசிடம் கூறியுள்ளன. இதை அரசு ஏற்றதாக தெரியவில்லை.
சிறப்பு ரெயில்கள்
மாநில அரசிடம் பணம் உள்ளது. ஏற்கனவே தாக்கல் செய்த பட்ஜெட்டை மறுபரிசீலனை செய்ய வேண்டும். இந்த நெருக்கடியான தருணத்தில் எந்த வகை தொழிலாளர்களுக்கு எவ்வளவு நிதி உதவி வழங்க வேண்டும் என்பது மட்டுமே முடிவு செய்ய வேண்டும். மத்திய அரசு ரூ.1.70 லட்சம் கோடிக்கு உதவி திட்டத்தை அறிவித்தது. அந்த திட்டத்தின் பயன் எத்தனை பேருக்கு கிடைத்தது என்று தெரியவில்லை.
வெளிமாநிலங்களில் சிக்கித்தவிக்கும் கன்னடர்களை சிறப்பு ரெயில்கள் மூலம் கர்நாடகத்திற்கு அழைத்து வர வேண்டும் என்றும், அதற்கு ஆகும் செலவை காங்கிரஸ் ஏற்பதாகவும் ரெயில்வே அதிகாரிகளிடம் கூறினேன். அதற்கு அவர்கள், மேல் அதிகாரிகளிடம் பேசிவிட்டு சொல்வதாக கூறியுள்ளனர்.”
இவ்வாறு டி.கே.சிவக் குமார் கூறினார்.
Related Tags :
Next Story