குமரியில் கொரோனாவுக்கு முதல் பலி ஆசாரிபள்ளம் ஆஸ்பத்திரியில் முதியவர் சாவு
குமரி மாவட்டத்தில் கொரோனாவுக்கு முதியவர் பலியானார். இதன் மூலம் குமரியில் கொரோனாவுக்கு முதல் பலியானது.
நாகர்கோவில்,
குமரி மாவட்டத்தில் கொரோனாவுக்கு முதியவர் பலியானார். இதன் மூலம் குமரியில் கொரோனாவுக்கு முதல் பலியானது.
24 பேர் பாதிப்பு
குமரி மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 24 ஆக இருந்து வருகிறது. அவர்களில் 16 பேர் முழுமையாக குணம் அடைந்து வீடு திரும்பி விட்டனர். பெண் லேப் டெக்னீசியன் ஒருவர் சென்னையில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த நிலையில் வெளி மாவட்டங்கள், வெளி மாநிலங்களில் இருந்து வந்த 8 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது. அவர்களில் ஒரு பெண் குழந்தை உள்பட 7 பேர் குமரி மற்றும் கேரள மாநிலத்தைச் சேர்ந்தவர்கள். ஒருவர் கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த கார் டிரைவர்.
ஆம்புலன்சில் வந்தவர்
இவர்களில் கேரள மாநிலத்தைச் சேர்ந்த பெண் குழந்தை மற்றும் கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த கார் டிரைவரைத் தவிர மற்ற 6 பேரும் ஆசாரிபள்ளம் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். கார் டிரைவர் கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்தவராக இருப்பதாலும், அங்குள்ள ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெறுவதாலும் அவரை கடலூர் மாவட்ட கொரோனா பாதிப்பு எண்ணிக்கையில் சேர்த்துள்ளனர். மற்ற 7 பேரையும் குமரி மாவட்ட பட்டியலுக்கு கொண்டு வந்தனர். இதனால் குமரி மாவட்டத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 24 ஆக உள்ளது.
இதற்கிடையே குமரி மாவட்டம் மயிலாடியைச் சேர்ந்த 65 வயது முதியவர் ஒருவர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு இருந்தார். அதற்காக அவர் சென்னையில் உள்ள ஆஸ்பத்திரி ஒன்றில் சிகிச்சை பெற்று வந்தார். கடந்த சில நாட்களுக்கு முன் அவர் சிகிச்சைக்காக சென்னை சென்றிருந்தார். அப்போது அவருடைய உடல்நிலை மிகவும் மோசமானது. இதனால் அவரை சென்னையில் இருந்து ஊருக்கு ஆம்புலன்சில் அனுப்பி வைத்தனர்.
பிணவறையில் உடல்
கடந்த 9-ந் தேதி இரவு அந்த ஆம்புலன்ஸ், குமரி மாவட்டம் ஆரல்வாய்மொழி சோதனைச் சாவடி வந்ததும் அங்கிருந்த போலீசாரும், சுகாதாரத்துறை அதிகாரிகளும் தடுத்து நிறுத்தினர். கவலைக்கிடமான நிலையில் இருந்த அந்த முதியவருக்கு கொரோனா பரிசோதனை செய்த பிறகு தான் வீட்டுக்கு அனுப்ப முடியும் என்று உடன் வந்த மகளிடம் தெரிவித்தனர்.
பின்னர் அவரை ஆசாரிபள்ளம் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். மேலும், கொரோனா பரிசோதனைக்கான சளி மற்றும் ரத்த மாதிரிகளை சேகரித்து அனுப்பி வைத்தனர். சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட 1 மணி நேரத்திலேயே அவர் இறந்து விட்டார். ஆனாலும் பரிசோதனை முடிவு வராததால் அவருடைய உடலை உறவினர்களிடம் கொடுக்காமல், ஆஸ்பத்திரி பிணவறையில் பாதுகாப்பாக வைத்திருந்தனர்.
கொரோனாவுக்கு சாவு
இந்த நிலையில் நேற்று காலை அந்த முதியவரின் கொரோனா பரிசோதனை முடிவு வந்தது. அதில் அவருக்கு கொரோனா பாதிப்பு இருந்தது தெரிய வந்தது. இதனால் சுகாதாரத்துறையினர் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் அவருடைய உறவினர்களுக்கு இதுபற்றிய விவரம் தெரிவிக்கப்பட்டது. மேலும் உடலை நாகர்கோவில் மாநகராட்சி எரிவாயு தகன மேடையில் தகனம் செய்ய சுகாதாரத்துறை அதிகாரிகள் முதியவரின் உறவினர்களிடம் அறிவுறுத்தினர். அதற்கு அவர்களும் சம்மதம் தெரிவித்தனர்.
இதையடுத்து அதிகாரிகள் முதியவரின் உடலை பாதுகாப்பான முறையில் கருப்பு பையில் பொதிந்து கொடுத்தனர். பின்னர் அந்த உடல் ஆம்புலன்சில் ஏற்றப்பட்டு நேற்று மதியம் புளியடியில் உள்ள மாநகராட்சி எரிவாயு தகன மையத்துக்கு கொண்டு சென்று எரியூட்டப்பட்டது. அப்போது அங்குள்ள ஊழியர்கள் பாதுகாப்பு கவச உடை அணிந்து உடலை ஆம்புலன்சில் இருந்து இறக்கி எரிவாயு தகனமேடையில் வைத்து எரித்தனர்.
உடலை ஆம்புலன்சில் இருந்து இறக்குவதற்கு முன்பும், எரித்த பின்னரும் தகனம் செய்த ஊழியர்கள் மீது கிருமி நாசினி மருந்து தெளிக்கப்பட்டது. அதேபோல ஆம்புலன்ஸ் மற்றும் உடல் எடுத்து வரப்பட்ட ஸ்டிரெச்சர் ஆகியவற்றிலும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது.
முதல் பலி
மேலும் முதியவருடன் சென்னையில் இருந்து ஆம்புலன்சில் வந்த அவருடைய மகளுக்கும் கொரோனா பரிசோதனைக்கு சளி மாதிரி சேகரிக்கப்பட்டு, அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மேலும் அவருடன் தொடர்பில் இருந்தவர்கள் யார்? யார்? என்பது குறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.
குமரி மாவட்டத்தில் கொரோனாவுக்கு முதன் முறையாக இந்த முதியவர் பலியாகி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் குமரி மாவட்ட மக்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.
Related Tags :
Next Story