தமிழ்நாட்டில் இருந்து கேரளாவுக்கு செல்பவர்கள் அந்த மாநில அனுமதியும் வாங்க வேண்டும் - கோவை மாவட்ட போலீசார் அறிவிப்பு
கேரள மாநிலத்துக்கு செல்பவர்கள் அந்த மாநில அனுமதி (இ-பாஸ்) பெற வேண்டும் என்று கோவை மாவட்ட போலீசார் அறிவித்துள்ளனர்.
கோவை,
கொரோனா வைரஸ் பரவுவதை தடுப்பதற்காக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு நடைமுறையில் உள்ளது. இதனால் ஒரு மாவட்டத்தில் இருந்து மற்றொரு மாவட்டத்துக்கு செல்வதற்கும், ஒரு மாநிலத்தில் இருந்து மற்றொரு மாநிலத்துக்கு செல்வதற்கும் ஆன்லைனில் விண்ணப்பித்து இ-பாஸ் என்ற அனுமதி பெற வேண்டும்.
தமிழகத்திலிருந்து கேரளாவுக்கு செல்ல வேண்டுமென்றால் இரண்டு மாநிலங்களிலும் இ-பாஸ் பெற வேண்டும். இதை பலர் சரியாக புரிந்து கொள்ளாமல் தமிழகத்தில் மட்டும் இ-பாஸ் வாங்கி விடுகிறார்கள். அதை வைத்து தமிழக எல்லை வரை செல்ல முடியும். அதன்பின்னர் கேரளாவுக்குள் செல்வதற்கு அந்த மாநில இ-பாஸ் பெற வேண்டும்.
இதுகுறித்து கோவை மாவட்ட போலீசார் வேண்டுகோள் விடுத்து கூறியதாவது:-
ஊரடங்கு காலத்தில் தமிழகத்திற்குள் செல்வதற்கு ஒரு இணைய தளத்திலும், ஒரு மாநிலத்திலிருந்து மற்றொரு மாநிலத்துக்கு செல்வதற்கு மற்றொரு இணைய தளத்திலும் விண்ணப்பிக்க வேண்டும். உதாரணத்துக்கு சென்னையில் இருந்து ஒருவர் கேரளா செல்ல வேண்டுமென்றால் அவர் சென்னை கலெக் டர் அலுவலகத்தில் விண்ணப்பித்து இ-பாஸ் பெறலாம். அதை வைத்து வாளையாறில் உள்ள தமிழக எல்லை வரை செல்ல முடியும். அதன்பின்னர் கேரளாவுக்குள் நுழைய வேண்டுமென்றால் கேரளாவில் எந்த மாவட்டத்துக்கு செல்ல வேண்டுமோ அந்த மாவட்ட கலெக் டர் அலுவலகத்துக்கு விண்ணப்பித்து இ-பாஸ் பெற வேண்டும்.
இந்த 2 இ-பாஸ்களும் இருந்தால் தான் ஒருவர் தமிழகத்திலிருந்து கேரளாவுக்குள் செல்ல முடியும். இது பலருக்கு புரியாமல் தமிழகத்தில் மட்டும் இ-பாஸ் வாங்கி விடுகிறார்கள். இது போதாது. சமீப காலமாக கேரள மாநிலம் செல்ல பலர் கோவை மாவட்டம் வாளையார் வழியாக செல்ல முயற்சி செய்து நீண்ட வரிசையில் காத்திருந்து கேரளா போலீசாரால் அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் ஏமாற்றத்துடன் திரும்பி செல்வது வாடிக்கையாகியுள்ளது.
கேரளா மாநிலம் செல்ல விரும்புகிறவர்கள் கேரளா மாநில அரசிடம் இருந்து உரிய இபாஸ் பெற்றிருந்தால் மட்டுமே கேரளா எல்லைக்குள் கேரளா போலீசார் அனுமதிக்கின்றனர். என்பதால் கேரள மாநில அரசிடம் இருந்து உரிய இபாஸ் பெறாத யாரும் வாளையார் வழியாக கேரளா செல்ல முயற்சித்து கஷ்டப்பட வேண்டாம்.
இவ்வாறு போலீசார் கூறினார்கள்.
Related Tags :
Next Story