மாலத்தீவில் இருந்து கப்பலில் வந்த குமரியை சேர்ந்த 147 பேர் விடுதிகளில் தங்க வைப்பு கொரோனா பரிசோதனை முடிவுக்காக காத்திருப்பு
மாலத்தீவில் இருந்து கப்பலில் கொச்சிக்கு வந்த குமரியை சேர்ந்த 147 பேர் தமிழக-கேரள எல்லையில் விடுதிகளில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
கன்னியாகுமரி,
மாலத்தீவில் இருந்து கப்பலில் கொச்சிக்கு வந்த குமரியை சேர்ந்த 147 பேர் தமிழக-கேரள எல்லையில் விடுதிகளில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். கொரோனா பரிசோதனை முடிவு வந்த பின்பே வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
கப்பலில் கொண்டு வரப்பட்டனர்
சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி உயிர் பலி வாங்கி வருகிறது. இதனால், விமானம் உள்பட அனைத்துவகை போக்குவரத்துகளும் நிறுத்தப்பட்டுள்ளன. வேலை நிமித்தமாக பல்வேறு நாடுகளில் வசித்து வரும் இந்தியர்கள் சொந்த ஊர்களுக்கு வர முடியாமல் சிக்கி தவிக்கின்றனர். அவர்களை மீட்டு கொண்டு வர மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.
மாலத்தீவில் தங்கியிருந்த இந்தியர்களை மீட்டு வர மத்திய அரசு கப்பல்படைக்கு சொந்தமான ஒரு கப்பலை அனுப்பி வைத்தது. அந்த கப்பல் அங்கிருந்து தமிழர்கள் உள்பட 698 பேருடன் நேற்று முன்தினம் கேரள மாநிலம் கொச்சி துறைமுகத்திற்கு வந்தது. அதில் குமரி மாவட்டத்தை சேர்ந்த 147 பேர் வந்திருந்தனர். அவர்களை கொச்சியில் இருந்து கன்னியாகுமரிக்கு அழைத்து வர தமிழக அரசு போக்குவரத்து கழகம் சார்பில் 7 அரசு பஸ்கள் மற்றும் 5 கார்கள் குமரி மாவட்டத்தில் இருந்து கொச்சி துறைமுகத்திற்கு சென்றன.
விடுதிகளில் தங்க வைப்பு
அந்த வாகனங்கள் மூலம் கொச்சி துறைமுகத்தில் இருந்து குமரியை சேர்ந்த 147 பேர் நேற்று முன்தினம் இரவு 11.30 மணியளவில் தமிழக கேரள எல்லையான களியக்காவிளைக்கு கொண்டு வரப்பட்டனர். தொடர்ந்து அந்த பயணிகளுக்கு களியக்காவிளை சோதனை சாவடியில் கொரோனா பரிசோதனை செய்ய ரத்தம் மற்றும் சளி மாதிரிகள் சேகரிக்கப்பட்டன. பின்னர், 29 ஆண்கள் மற்றும் 1 பெண் என 30 பேர் கொல்லங்கோடு அருகே கண்ணனாகம் பகுதியில் உள்ள ஒரு தங்கும் விடுதியிலும், 3 பெண் உள்பட 57 பேர் களியக்காவிளையில் உள்ள ஒரு தங்கும் விடுதியிலும், மீதமுள்ள 60 பேர் கன்னியாகுமரியில் உள்ள ஒரு விடுதியிலும் தங்க வைத்துள்ளனர். விடுதியை சுற்றி போலீசார் மற்றும் முன்னாள் ராணுவ வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இவர்களுக்கு தேவையான உணவு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட் களை அந்தந்த பகுதியை சேர்ந்த பேருராட்சி ஊழியர்கள் கவச உடை அணிந்து வழங்கி வருகிறார்கள். விடுதி அமைந்துள்ள பகுதிகளில் கிருமி நாசினி மருந்து அடிக்கப்பட்டு வருகிறது.
காத்திருப்பு
அவர்களிடம் இருந்து எடுக்கப்பட்ட கொரோனா பரிசோதனை முடிவுகள் வர 3 நாட்கள் ஆகும். அதுவரை பயணிகள் அனைவரையும் தங்கும் விடுதிகளில் தங்க வைக்கப்பட்டு இருப்பார்கள். பரிசோதனையில் கொரோனா தொற்று உறுதி செய்யப்படும் நபர்கள் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்படுவார்கள். மற்ற நபர்களை அவரவர்களின் வீடுகளில் சுயகட்டுபாடுடன் தங்கி இருக்க அறிவுறுத்தி அனுப்பி வைக்க படுவார்கள் என அதிகாரிகள் தெரிவித்தனர். இதையடுத்து விடுதிகளில் தங்கி இருப்பவர்கள் தங்களது பரிசோதனை முடிவுக்காக காத்திருக்கின்றனர்.
Related Tags :
Next Story