ராஜபாளையம் முதியவருக்கும் தொற்று மும்பையில் இருந்து மதுரை வந்த பெண் உள்பட 4 பேருக்கு கொரோனா
மும்பையில் இருந்து வந்த பெண் உள்பட மதுரையில் மேலும் 4 பேருக்கும், ராஜபாளையம் முதியவர் ஒருவருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
மதுரை,
மதுரையில் நேற்று முன்தினம் வரை கொரோனா பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 118-ஆக இருந்தது. இந்த நிலையில் நேற்று மேலும் 4 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. அவர்களில் ஒருவர் மதுரை சமயநல்லூர் அருகே உள்ள தோடனேரி கிராமத்தை சேர்ந்த 23 வயது வாலிபர். இவர் விமான நிலையத்தில் தற்காலிக ஊழியராக பணியாற்றி வருகிறார். நேற்று முன்தினம் இவரது உறவினர் ஒருவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்ட நிலையில் தற்போது அந்த வாலிபருக்கும் உறுதி செய்யப்பட்டுள்ளது.
மற்றொருவர் மதுரை மேலூர் அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த பெண். அதாவது, மும்பையில் இருந்து 16 பேர் கொண்ட குழுவினர் மதுரை மேலூருக்கு வந்தனர். அவர்களை அங்குள்ள மருத்துவ முகாமில் சுகாதார அதிகாரிகள் தங்க வைத்திருந்தனர். இந்த நிலையில் அங்கு தங்கியிருந்த அந்த 35 வயது பெண்ணுக்கு நேற்று கொரோனா உறுதிசெய்யப்பட்டது. இதனை தொடர்ந்து அவர் மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து வரப்பட்டு அங்குள்ள கொரோனா வார்டில் அனுமதிக்கப்பட்டார்.
மற்ற 2 பேரும் மதுரை கோரிப்பாளையம் பகுதியை சேர்ந்தவர்கள். அவர்களில் ஒருவர் நேற்று முன்தினம் கொரோனாவால் பாதிக்கப்பட்ட கர்ப்பிணியின் தாயார் ஆவார். இவருடைய வயது 43.
இதுபோல் மற்றொருவர், அதே பகுதியை சேர்ந்த 54 வயது நபர். இவருக்கு காய்ச்சல் உள்ளிட்ட அறிகுறிகள் இருந்தன. இதன் அடிப்படையில் நடத்தப்பட்ட பரிசோதனையில் கொரோனா பாதிப்பு இருந்தது தெரியவந்தது. இதனை தொடர்ந்து இவர்கள் 2 பேரும் தற்போது மதுரை கொரோனா வார்டில் அனுமதிக்கப்பட்டு இருக்கிறார்கள்.
இதுபோல் இவர்களுடன் தொடர்பில் இருந்த சிலரது ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு, பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. இதனை தொடர்ந்து அவர்கள் தங்கியிருந்த பகுதிகளில் உள்ள தெருக்கள் சீல் வைத்து அடைக்கப்பட்டன.
மேலும் சுகாதார துறையின் மூலம் அவர்கள் தங்கியிருந்த குடியிருப்பை சுற்றி கிருமிநாசினி தெளிக்கும் பணியும் நடைபெற்று வருகிறது. இதன்மூலம் மதுரையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 122-ஆக உயர்ந்தது.
மதுரையில் சில தினங்களுக்கு முன்பு ஒரே நாளில் 20 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. அவர்களில் மதுரை சுப்பிரமணியபுரம் பகுதியை சேர்ந்த 30 வயது கர்ப்பிணியும் ஒருவர். அவர் மதுரை அரசு ஆஸ்பத்திரியில் உள்ள கொரோனா சிறப்பு வார்டில் அனுமதிக்கப்பட்டார்.
இந்த நிலையில் நேற்று அவருக்கு ஆண் குழந்தை பிறந்தது. தற்போது அந்த குழந்தையும், அந்த பெண்ணும் ஆரோக்கியமாக இருக்கிறார்கள். இருப்பினும் அந்த குழந்தைக்கு, தாயிடம் இருந்து கொரோனா பரவுவதற்கு வாய்ப்புகள் இருப்பதால், குழந்தைக்கும் கொரோனா தொடர்பான பரிசோதனை செய்யப்பட இருக்கிறது. அந்த பரிசோதனை முடிவுகள் வந்த பின்னரே குழந்தைக்கு பாதிப்பு இருக்கிறதா-இல்லையா? என்பதை உறுதியாக கூறமுடியும் என டாக்டர்கள் தெரிவித்தனர்.
விருதுநகர் மாவட்டத்தில் 39 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு இருந்தது. அவர்களில் 6 பேர் மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மற்றவர்கள் குணம் அடைந்தனர். விருதுநகர் மாவட்டத்தை பொறுத்தவரை கொரோனா தொற்று ஏற்பட்டவர்களில் பெரும்பாலானோர் வெளி மாவட்டங்களில் இருந்து வந்தவர்கள். இந்த நிலையில் நேற்று ராஜபாளையம் அழகாபுரி பகுதியை சேர்ந்த 60 வயது முதியவர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர் இருதய நோய் சிகிச்சைக்காக மதுரையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் அங்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டதில் கொரோனா தொற்று இருப்பது உறுதியாகி உள்ளது. இதை தொடர்ந்து அழகாபுரி பகுதியில் நோய் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதனால் விருதுநகர் மாவட்டத்தில் பாதிப்பு எண்ணிக்கை 40-ஆக உயர்ந்துள்ளது.
Related Tags :
Next Story