கூடலூர் அருகே, 2-வது நாளாக காட்டுயானை அட்டகாசம் - குடிசை வீடுகளை சேதப்படுத்தியது


கூடலூர் அருகே, 2-வது நாளாக காட்டுயானை அட்டகாசம் - குடிசை வீடுகளை சேதப்படுத்தியது
x
தினத்தந்தி 12 May 2020 4:30 AM IST (Updated: 12 May 2020 7:56 AM IST)
t-max-icont-min-icon

கூடலூர் அருகே 2-வது நாளாக குடிசை வீடுகளை சேதப்படுத்தி காட்டுயானை அட்டகாசம் செய்தது.

கூடலூர்,

கூடலூர் அருகே ஸ்ரீமதுரை ஊராட்சி மேலம்பலம் ஆதிவாசி கிராமத்துக்குள் கடந்த சில நாட்களாக காட்டுயானை ஒன்று புகுந்து வருகிறது. தொடர்ந்து குடிசை வீடுகளை முற்றுகையிட்டு சேதப்படுத்துகிறது. நேற்று முன்தினம் சூடன் என்பவரது குடிசையை சேதப்படுத்திய காட்டுயானை, துதிக்கையை உள்ளே நுழைத்து அரிசி, பருப்பு உள்ளிட்ட உணவு பொருட்களை வெளியே தூக்கி வீசி தின்றது.

இந்த நிலையில் நேற்று அதிகாலை 2-வது நாளாக காட்டுயானை கிராமத்துக்குள் புகுந்தது. பின்னர் கோலன், கேம்பி ஆகியோரது குடிசை வீடுகளை சேதப்படுத்தி அட்டகாசம் செய்தது. இதனால் ஆதிவாசி மக்கள் பீதி அடைந்தனர். பின்னர் அனைவரும் ஒன்று திரண்டு வந்து, கூச்சலிட்டு காட்டுயானையை விரட்டியடித்தனர். அதன்பின்னர் காட்டுயானை அங்கிருந்து சென்றது. இதுகுறித்து தகவல் அறிந்த வனத்துறையினர் நேரில் வந்து விசாரணை நடத்தினர். இதுகுறித்து ஆதிவாசி மக்கள் கூறியதாவது:-

இந்த கிராமத்தில் பனியர் இன ஆதிவாசி மக்கள் 22 குடும்பங்கள் உள்ளன. நாங்கள் வசிக்கும் நிலத்துக்கு பட்டா வழங்கப்பட்டு உள்ளது. ஆனால் இதுவரை தொகுப்பு வீடுகள் கட்டி கொடுக்கப்படவில்லை. இதனால் குடிசைகளில் வாழ்ந்து வருகிறோம். கழிப்பறை, மின்சாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளும் கிடையாது. இதனால் காட்டுயானைகள் ஊருக்குள் அடிக்கடி வந்து குடிசை வீடுகளை சேதப்படுத்துகின்றன. கூலி வேலைக்கு சென்று, அதில் கிடைக்கும் வருவாயை கொண்டு குடும்பத்தை நடத்தும் நிலையில், சேதம் அடைந்த குடிசைகளை சீரமைக்க எங்களிடம் பொருளாதார வசதி இல்லை.

இன்னும் 1 வாரத்தில் கூடலூர் பகுதியில் தென்மேற்கு பருவமழை பெய்ய உள்ளது. ஆனால் குடிசைகளை தினமும் காட்டு யானைகள் சேதப்படுத்தி வருவதால், மழையில் நனைந்தவாறு வசிக்கும் சூழல் உருவாகி உள்ளது. எனவே வனத்துறையினர் காட்டுயானைகள் கிராமத்துக்குள் வருவதை தடுப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

பந்தலூர் தாலுகாவிற்கு உட்பட்ட பிதிர்காடு பஜாருக்குள் நேற்று முன்தினம் நள்ளிரவில் குட்டியுடன் 5 காட்டுயானைகள் புகுந்தன. பின்னர் பாக்கு மரங்களை சாய்த்து, குருத்துகளை தின்றன. இதனால் அப்பகுதி மக்கள் பீதி அடைந்தனர். அங்கு விடிய, விடிய முகாமிட்டு இருந்த காட்டு யானைகள், அதன்பிறகு வனத்துக்குள் சென்றன.

Next Story