முகக்கவசம் அணியாத வாடிக்கையாளர்களுக்கு பொருட்கள் வழங்கும் கடைகளுக்கு ‘சீல்’ - கலெக்டர் எச்சரிக்கை


முகக்கவசம் அணியாத வாடிக்கையாளர்களுக்கு பொருட்கள் வழங்கும் கடைகளுக்கு ‘சீல்’ - கலெக்டர் எச்சரிக்கை
x
தினத்தந்தி 12 May 2020 3:45 AM IST (Updated: 12 May 2020 7:56 AM IST)
t-max-icont-min-icon

முகக்கவசம் அணியாத வாடிக்கையாளர்களுக்கு பொருட்கள் வழங்கும் கடைகளுக்கு ‘சீல்’ வைக்கப்படும் என்று கலெக்டர் எச்சரித்து உள்ளார். இதுகுறித்து நீலகிரி மாவட்ட கலெக்டர் இன்னசென்ட் திவ்யா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளதாவது:-

ஊட்டி,

தமிழகத்தில் கட்டுப்பாட்டு பகுதிகளை தவிர பிற பகுதிகளில் பல்வேறு தளர்வுகள் வழங்கி அரசு உத்தரவிட்டு உள்ளது. அதன்படி நீலகிரி மாவட்டத்தில் அத்தியாவசிய பொருட்களான காய்கறி, மளிகை பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள் காலை 6 மணி முதல் இரவு 7 மணி வரை செயல்படும். டீக்கடைகள், பேக்கரிகள் மற்றும் உணவகங்களில் பார்சல் மட்டும் வழங்க வேண்டும். தனிக்கடைகள் காலை 10.30 மணி முதல் இரவு 7 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படுகிறது.

கட்டுமான பொருட்கள் விற்கும் கடைகள், மின்சாதன பொருட்கள் மற்றும் பழுது நீக்கும் கடைகள், செல்போன் விற்கும் மற்றும் பழுது நீக்கும் கடைகள், மோட்டார் எந்திரங்கள், வீட்டு உபயோக எந்திரங்கள் மற்றும் பொருட்கள், ஊரக பகுதிகளில் மட்டும் சிறிய ஜவுளிக்கடைகள்(குளிர்சாதன வசதி இல்லாதவை) உள்பட மொத்தம் 34 வகையான கடைகள் செயல்படலாம். மேலும் பெட்ரோல் விற்பனை நிலையங்கள் காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை செயல்படும். தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் உள்ளவை 24 மணி நேரமும் இயங்கும்.

சலூன்கள், அழகு நிலையங்கள், ஸ்பாக்கள் இயங்கக் கூடாது. அனுமதிக்கப்பட்ட கடை உரிமையாளர்கள் வாடிக்கையாளர்களிடம் தனிநபர் இடைவெளியை பின்பற்ற அறிவுறுத்துவதோடு, கிருமிநாசினி பயன்படுத்துவதை உறுதி செய்ய வேண்டும். அனைவரும் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும். சமூக இடைவெளிக்கான ஏற்பாடுகளை செய்ய வேண்டும். கடைகளுக்கு முகக்கவசம் அணியாமல் வருகிறவர்களுக்கு பொருட்கள் வழங்கக்கூடாது.

இந்த நடைமுறையை பின்பற்றாதவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுப்பதுடன், சம்பந்தப்பட்ட கடைகளுக்கு ‘சீல்’ வைக்கப்படும். மார்க்கெட்டுகள், வணிக வளாகங்கள் திறக்க அனுமதி இல்லை. இதுதவிர மற்ற கடைகள் திறப்பது தொடர்பாக மண்டல அலுவலர்கள் ஆய்வு செய்வார்கள். நீலகிரியில் தேயிலை தொழிற்சாலைகளில் அனைத்து பணிகளுக்கும் கால நீட்டிப்பு வழங்கப்பட்டு உள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

Next Story