கொரோனா பாதித்த நபர் குணமாகி 14 நாட்கள் ஆனதால் தேங்காப்பட்டணம் தோப்பு பகுதியில் இன்று முதல் கட்டுப்பாடுகள் நீக்கம்


கொரோனா பாதித்த நபர் குணமாகி 14 நாட்கள் ஆனதால் தேங்காப்பட்டணம் தோப்பு பகுதியில் இன்று முதல் கட்டுப்பாடுகள் நீக்கம்
x
தினத்தந்தி 12 May 2020 8:13 AM IST (Updated: 12 May 2020 8:13 AM IST)
t-max-icont-min-icon

தேங்காப்பட்டணம் தோப்பு பகுதியில் கொரோனா பாதித்த நபர் குணமாகி 14 நாட்கள் ஆனதால் அங்கு இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் கட்டுப்பாடுகள் நீக்கம் செய்யப்படுவதாக கலெக்டர் பிரசாந்த் வட நேரே கூறியுள்ளார்.

நாகர்கோவில், 

தேங்காப்பட்டணம் தோப்பு பகுதியில் கொரோனா பாதித்த நபர் குணமாகி 14 நாட்கள் ஆனதால் அங்கு இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் கட்டுப்பாடுகள் நீக்கம் செய்யப்படுவதாக கலெக்டர் பிரசாந்த் வட நேரே கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

கொரோனா பரிசோதனை

குமரி மாவட்டத்தில் ஆசாரிபள்ளம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையிலும், களபணியாளர்கள் மூலமாகவும், ஆரல்வாய்மொழி சோதனை சாவடி சுகாதாரப் பணியாளர்கள் மூலமாகவும் 6,306 பேருக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது.

கொரோனா நோய்தொற்றிற்கு சிகிச்சை பெற்று வந்தவர்களில் இதுவரை 16 பேர் பாதிப்பில் இருந்து முற்றிலுமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். குணமடைந்த நபர்கள் 14 நாட்கள் வீட்டு தனிமைப்படுத்தலில் வைக்கப்பட்டுள்ளனர்.

தேங்காப்பட்டணம் தோப்பு

குமரி மாவட்டத்தில் கட்டுப்பாட்டு வளையத்திற்குள் இருந்த தேங்காப்பட்டணம் தோப்பு பகுதியில் கடைசி நோயாளி குணமடைந்து 14 நாட்கள் ஆகியிருந்த நிலையில் குணமடைந்த அந்த நபருக்கு மீண்டும் பரிசோதனை செய்யப்பட்டது. அப்போது அவருக்கு நோய் தொற்று இல்லை என்பது கண்டறியப்பட்டது.

எனவே தேங்காப்பட்டணம் தோப்பு பகுதியில் இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் கட்டுப்பாடுகள் நீக்கப்படுகிறது.

பெட்ரோல் விற்பனை நிலையங்கள்

தேசிய நெடுஞ்சாலை மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் அமைந்துள்ள பெட்ரோல் விற்பனை நிலையங்கள் 24 மணி நேரமும், மாவட்டத்தின் பிற பகுதிகளில் உள்ள பெட்ரோல் விற்பனை நிலையங்கள் காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரையும் இயங்கலாம். டீக்கடைகள் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்பட அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. குமரி மாவட்டத்தில் மொத்தம் 300 பேர் வீட்டு தனிமைப்படுத்தலில் வைக்கப்பட்டுள்ளனர்.

ஊரடங்கை மீறியதாக நேற்று 10 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. மூன்று வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மொத்தத்தில் இதுவரை 7,434 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 5,769 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story