ஊரடங்கால் கர்நாடகாவில் சிக்கி தவித்த 62 கட்டிட தொழிலாளர்கள் தர்மபுரி வந்தனர்


ஊரடங்கால் கர்நாடகாவில் சிக்கி தவித்த 62 கட்டிட தொழிலாளர்கள் தர்மபுரி வந்தனர்
x
தினத்தந்தி 12 May 2020 8:50 AM IST (Updated: 12 May 2020 8:50 AM IST)
t-max-icont-min-icon

ஊரடங்கால் கர்நாடகாவில் சிக்கி தவித்த 62 கட்டிட தொழிலாளர்கள் தர்மபுரி வந்தனர்.

தர்மபுரி,

தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்த தொழிலாளர்கள் கர்நாடக மாநிலம் உடுப்பி மாவட்டத்தில் பல்வேறு கட்டுமான பணிகளில் ஈடுபட்டு வந்தனர். ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டதால் இவர்கள் சொந்த ஊர்களுக்கு திரும்ப முடியாமல் உடுப்பி பகுதியிலேயே தவித்து வந்தனர். ஊரடங்கு காலத்தில் அவர்களுக்கு தேவையான உணவு உள்ளிட்ட வசதிகள் ஏற்பாடு செய்து கொடுக்கப்பட்டது. இந்த நிலையில் கட்டிட தொழிலாளர்கள் தாங்கள் சொந்த ஊருக்கு திரும்புவதற்கு வழிவகை செய்ய வேண்டும் என்று மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்தனர். இந்த கோரிக்கையை ஏற்று அதற்கான ஏற்பாடு செய்யப்பட்டது.

இதையடுத்து உடுப்பியில் இருந்து கட்டிட தொழிலாளர்கள் 62 பேரும் 2 பஸ்களில் நேற்று தர்மபுரி வந்தனர். அவர்கள் செட்டிக்கரை அரசு பொறியியல் கல்லூரி வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டனர். இவர்கள் அனைவருக்கும் கொரோனா வைரஸ் மருத்துவ பரிசோதனைக்கான ரத்தம், சளி மாதிரிகள் சேகரிக்கப்பட்டன. இதைத்தொடர்ந்து இவர்களை தனிமைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதேபோல் உடுப்பியில் உள்ள மேலும் 35 தொழிலாளர்களை தர்மபுரிக்கு அழைத்து வர வாகனங்கள் ஏற்பாடு செய்யப்பட்டு அனுப்பி வைக்கப்பட்டன. அவர்கள் இன்று (செவ்வாய்க்கிழமை) தர்மபுரிக்கு அழைத்து வரப்படுகிறார்கள்.

Next Story