திருச்சி கலெக்டர் அலுவலகத்தில் ஊரடங்கு உத்தரவை மீறி மனு கொடுக்க வந்தவர்களால் பரபரப்பு


திருச்சி கலெக்டர் அலுவலகத்தில் ஊரடங்கு உத்தரவை மீறி மனு கொடுக்க வந்தவர்களால் பரபரப்பு
x
தினத்தந்தி 12 May 2020 9:31 AM IST (Updated: 12 May 2020 9:31 AM IST)
t-max-icont-min-icon

ஊரடங்கு உத்தரவையும் மீறி திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுக்க வந்தவர்களால் பரபரப்பு ஏற்பட்டது. போலீசார் அவர்களை உள்ளே செல்ல விடாமல் தடுத்தனர்.

திருச்சி,

ஊரடங்கு உத்தரவையும் மீறி திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுக்க வந்தவர்களால் பரபரப்பு ஏற்பட்டது. போலீசார் அவர்களை உள்ளே செல்ல விடாமல் தடுத்தனர்.

விலக்கப்படாத ஊரடங்கு

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்காக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு வருகிற 17-ந்தேதி வரை அமலில் உள்ளது. பொதுமக்களின் நலன் கருதி அத்தியாவசிய பொருட்களை வாங்கி கொள்வதற்கு வசதியாக 34 வகையான கடைகள் திறப்பதற்கு மட்டும் தளர்வு வழங்கப்பட்டு உள்ளது.

ஆனாலும் ஊரடங்கு, 144 தடை உத்தரவுகளை மீறி நேற்று திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு நாம் தமிழர் தொழிலாளர் நல சங்கத்தை சேர்ந்த ஆட்டோ டிரைவர்கள் திரண்டு வந்தனர். அவர்களை போலீசார் நுழைவு வாயிலில் தடுத்து நிறுத்தினார்கள். இதனால் போலீசாருடன் அவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதை தொடர்ந்து, முக்கிய நிர்வாகிகளை மட்டும் மனு கொடுப்பதற்கு அனுமதி வழங்கினர்.

ஆட்டோ ஓட்ட அனுமதி

அவர்கள் கொடுத்த மனுவில் பெரும்பாலான ஆட்டோ டிரைவர்கள் வங்கியில் கடன் பெற்று தான் ஆட்டோ ஓட்டி வருகிறார்கள். 40 நாட்களுக்கும் மேலாக ஆட்டோ ஓடாததால் குடும்பத்தை நடத்த முடியாத சூழல் ஏற்பட்டு இருப்பதோடு வங்கியில் வாங்கியகடனையும் கட்ட முடியாமல் தவித்து வருகிறோம். எனவே ஆட்டோ ஓட்டுவதற்கு அனுமதி அளிக்கவேண்டும் என கூறப்பட்டு இருந்தது.

இதே போல் அண்ணா டூரிஸ்ட் வேன் ஓட்டுனர் நல சங்கத்தினர் கலெக்டர் அலுவலகத்துக்கு திரண்டு வந்தனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினார்கள். அப்போது அந்த வழியாக கலெக்டரின் கார் வந்தது. ஏராளமானவர்கள் திரண்டு நின்றதால் கலெக்டர் எஸ்.சிவராசு காரை நிறுத்தி அவர்களிடம் விசாரணை நடத்தினார். கலெக்டரிடம் அவர் கள் மனு கொடுத்தனர்.

இழப்பீடு

அந்த மனுவில் திருச்சி மாவட்டத்தில் சுமார் 2,500 சுற்றுலா கார், வேன் டிரைவர்கள் உள்ளனர். ஊரடங்கு உத்தரவினால் நாங்கள் 40 நாட்களுக்கும் மேலாக வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வருகிறோம். எங்களுக்கு நல வாரியத்தில் இருந்தும் உதவி தொகை எதுவும் வரவில்லை. எனவே நாங்கள் ஏற்கனவே கட்டிய சாலைவரி, இன்சூரன்ஸ் தொகைகளில் இருந்து எங்களுக்கு இழப்பீடு வாங்கி தர மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவேண்டும் என கூறப்பட்டு இருந்தது.

இதுபோல் சொந்த ஊருக்கு திரும்பி செல்ல அனுமதிக்க கோரி உத்தரபிரதேசத்தை சேர்ந்த பானிப்பூரி தொழிலாளர்கள் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தனர். அவர்களை போலீசார் திருப்பி அனுப்பினர். ஒரே நேரத்தில் திரண்டு வந்த இவர்களால் கலெக்டர் அலுவலக பகுதியில் நேற்று பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story