கரூர் மாவட்டத்தில் வெற்றிலை ஆராய்ச்சி மையம் அமைக்க விவசாயிகள் கோரிக்கை
கரூர் மாவட்டத்தில் வெற்றிலை ஆராய்ச்சி மையம் அமைக்க விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கரூர்,
கரூர் மாவட்டத்தில் வெற்றிலை ஆராய்ச்சி மையம் அமைக்க விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வெற்றிலை சாகுபடி
கரூர் மாவட்டத்தில் நெல், கரும்பு, வாழை உள்ளிட்ட பயிர்கள் அதிக அளவில் பயிர் செய்யப்படுகின்றன. அவற்றுக்கு அடுத்த படியாக வெற்றிலையும், பரவலாக பயிரிடப்படுகிறது. மாவட்டத்தில் மாயனூர், கிருஷ்ணராயபுரம், லாலாபேட்டை உள்ளிட்ட பகுதிகளில் மட்டுமின்றி வேலாயுதம்பாளையம், புகளூர், தவிட்டுப்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் ஆயிரக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் வெற்றிலை சாகுபடி செய்யப்படுகிறது.
கற்பூர ரகம், வெள்ளை பச்சை கொடி ரகம் உள்ளிட்டவை கரூர் மாவட்டத்தில் இருந்து தான் மற்ற மாவட்டங்களுக்கும், வெளி மாநிலங்களுக்கும் அதிக அளவில் ஏற்றுமதி செய்யப்படுகிறது. காவிரி ஆற்றுப்படுகையில் சாகுபடி செய்யப்படும் வெற்றிலை 15 நாட்கள் வரை கெடாமல் இருக்கும். மேலும் வெற்றிலையை பாதுகாக்கவும், சாகுபடி பரப்பை அதிகரிக்கவும் வெற்றிலை ஆராய்ச்சி மையம் அமைக்க வேண்டும் என்று விவசாயிகள் பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
மதிப்பு கூட்டு பொருள்
இது குறித்து வெற்றிலை விவசாயிகள் கூறுகையில், நாமக்கல் மாவட்டம் ப.வேலூரில் இருந்த வெற்றிலை ஆராய்ச்சி மையத்தை பல ஆண்டுகளுக்கு முன்பு திருச்சி மாவட்டம் சிறுகமணிக்கு மாற்றி விட்டார்கள். அதனை மாற்றி கரூர் மாவட்டத்தில் அமைக்க வேண்டும். மேலும் தற்போது வெற்றிலையை பெரும்பாலான மக்கள் நேரிடையாக பயன்படுத்துவது இல்லை. இதனால் விற்பனை குறைந்து வருகிறது. மருத்துவ குணம் நிறைந்த வெற்றிலையை பயன்படுத்தும் வகையில் மதிப்பு கூட்டு பொருளாக மாற்ற அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
வெற்றிலையில் ஏற்படும் வாடல் நோயை கட்டுப்படுத்த முறையாக நடவடிக்கை தேவை. ஓராண்டில் 65 நாட்கள் மட்டுமே வெற்றிலை விவசாயிகளுக்கு வேலை உள்ளது. ஆண்டு முழுவதும் வேலை வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும், என்று அவர்கள் கூறினார்கள்.
Related Tags :
Next Story