கோரிக்கைகளை வலியுறுத்தி சிறுவாச்சூரில் டிரைவர்கள் சாலை மறியல்


கோரிக்கைகளை வலியுறுத்தி சிறுவாச்சூரில் டிரைவர்கள் சாலை மறியல்
x
தினத்தந்தி 12 May 2020 11:26 AM IST (Updated: 12 May 2020 11:26 AM IST)
t-max-icont-min-icon

கோரிக்கைகளை வலியுறுத்தி சிறுவாச்சூரில் சாலை மறியலில் ஈடுபட்ட 15 பேரை போலீசார் கைது செய்தனர்.

பெரம்பலூர், 

கோரிக்கைகளை வலியுறுத்தி சிறுவாச்சூரில் சாலை மறியலில் ஈடுபட்ட 15 பேரை போலீசார் கைது செய்தனர்.

சாலை மறியல்

டிரைவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற கோரி மத்திய- மாநில அரசுகளை வலியுறுத்தி தமிழ்நாடு அன்னை தெரசா அனைத்து வாகன ஓட்டுநர்கள் நல சங்கத்தினர் பெரம்பலூர் மாவட்ட கலெக்டரை நேற்று காலை சந்தித்து மனு கொடுப்பதாக ஏற்கனவே முடிவு செய்திருந்தனர். ஆனால் அந்த சங்கத்தின் டிரைவர்கள் கலெக்டரை சந்தித்து மனு கொடுக்காமல், சங்கத்தின் மாநில தலைவர் பெரியசாமி தலைமையில், கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சிறுவாச்சூரில் திடீரென்று சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்தப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அப்போது அவர்கள் பெரம்பலூர் மாவட்டத்தில் தனியார் டயர் தொழிற்சாலையில் பணிபுரியும் டிரைவர்களின் பிரச்சினைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். மேலும் கொரோனா ஊரடங்கு உத்தரவினால் பாதிக்கப் பட்ட தனியார் நிறுவன டிரைவர்களுக்கு சம்பளம் வழங்க வேண்டும்.

15 பேர் கைது

மத்திய-மாநில அரசுகள் டிரைவர்களுக்கு மாத சம்பளத்தை நிர்ணயித்து அரசு ஆணையில் வெளியிட வேண்டும். அரசாங்கத்தின் நேரடி கட்டுப்பாட்டில் உள்ள டிரைவர்களின் புகார்களை எடுத்து விசாரிப்பதற்கு தனி குழு அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற மத்திய-மாநில அரசுகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.

இதுகுறித்து தகவலறிந்த பெரம்பலூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, அவர்களிடம் மறியலை கைவிடுமாறும், இல்லையென்றால் கைது செய்யப்படுவீர்கள் என்றும் எச்சரித்தனர். ஆனாலும் டிரைவர்கள் தொடர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து சாலை மறியலில் ஈடுபட்ட 15 பேரை போலீசார் கைது செய்து வேனில் ஏற்றி, பெரம்பலூரில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர். பின்னர் அவர்கள் அனைவரும் மாலையில் விடுவிக்கப்பட்டனர்.

Next Story